பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியது என்றால், அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார். பெரியாருக்கு ஆதரவான 32 இயக்கங்களால் ஒன்று சேர்ந்து 300 பேரை கூட அழைத்து வர முடியவில்லை என்று கூறிய அவர், பெரியார் தொடர்பான பேச்சிற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் வெளியிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனைக் கண்டித்து தபெதிக, திக, மே 17 என்று 30க்கும் அதிகமான இயக்கங்கள் இன்று சென்னையிலுள்ள சீமானின் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சீமான் வீட்டின் முன் 200க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்னொரு பக்கம் சீமான் வீட்டில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளும் குவிந்து வந்தனர். அதிலும் சிலர் உருட்டுக்கட்டையுடன் நின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின் முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். அதேபோல் முற்றுகைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருமுருகன் காந்தியின் இயக்கத்தை சீமான் ஆதரவு இயக்கங்கள் முற்றுகையிட்டனர்.
இந்த நிலையில் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்த பிரச்சனைக்கு இவ்வளவு பேர் திரண்டு வந்துள்ளார்கள். ஆனால் இவர்கள் எந்த மக்கள் பிரச்சனைக்கு நின்றிருக்கிறார்கள். எல்லாமே பெரியார் தான் என்ற கருத்து தேவையா.. என்னை அப்புறப்படுத்துவேன் என்று சொல்பவர்கள் இத்தனை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தனர்.
நான் அரசியல் அநாதையாகுவேன் என்று ஒரு அநாதை கூறுகிறது. 32 இயக்கங்கள் சேர்ந்து 300 பேரை கூட கூட்டி வர முடியவில்லை. எத்தனை முறை சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கூறிக் கொண்டே இருக்கிறோம். 18 ஆண்டுகள் தொடர்ச்சியாக மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த ஒரே கட்சி திமுக தான். அப்போதெல்லாம் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை.
கல்வி மாநில உரிமை என்று பேசும் திமுக, அத்தனை ஆண்டு காலம் கல்வியை மாநிலப் பட்டியலுக்குள் கொண்டு வராதது ஏன்? பெரியார் தொடர்பான பேச்சிற்கான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நான் ஆதாரத்தை உரிய நேரத்தில் வெளியிடுவேன். இதே கருத்தை இதற்கு முன் நிறைய பேர் பேசி இருக்கிறார்கள். அப்போது வராத கோபம், நான் பேசும் போது மட்டும் வந்திருக்கிறது.
என் வீட்டிற்கு பதிலாக அருகிலுள்ள சலூன் கடையை தான் முற்றுகையிட்டுள்ளார்கள். பெரியாரை அதிகமாக விமர்சித்த கட்சி திமுக தான். நாங்கள் எதையும் ஆதாரமில்லாமல் பேசவில்லை. விடுதலைப்புலிகள் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் போலி என்று சொல்கிறார்கள். அதற்கான ஆதாரத்தை காட்டுங்கள். 15 ஆண்டுகளாக இந்த புகைப்படம் பற்றி பேசாதவர்கள், இப்போது பேசுகிறார்கள். பெரியார் பேசியதை, எழுதியதை தான் நாங்கள் பேசுகிறோம். என் கட்சியை வழக்குப் போட்டு முடிந்தால் தடுத்து நிறுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment