பரமக்குடி நகராட்சி பகுதியில் வீடு கட்ட திட்ட அனுமதி வழங்குவதற்காக பொறியாளரிடமிருந்து ஜி-பே மூலம் லஞ்சம் வாங்கிய நகராட்சி நகரமைப்பு அதிகாரியை ராம்நாடு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சியில் பதிவு பெற்ற பொறியாளர் ஒருவர், தனது வாடிக்கையாளருக்கு வீடு கட்டி கொடுப்பதற்கான பிளான் அப்ரூவல் கோரி பரமக்குடி நகராட்சியில் மனு அளித்துள்ளார். இதற்கான அரசு நிர்ணயித்த கட்டணத்தையும் அவர் செலுத்தியுள்ளார். கட்டணம் செலுத்தி பல நாள்களாகியும் ப்ளான் அப்ரூவல் ஆகவில்லை. இதையடுத்து அந்த பொறியாளர் பரமக்குடி நகராட்சியில் நகரமைப்பு திட்ட அதிகாரியாக பணிபுரிந்து வரும் பர்குணனை சந்தித்து விபரம் கேட்டுள்ளார்.
ஆனால் பர்குணன், அந்த பொறியாளரிடம் வீடு கட்ட பிளான் அப்ரூவல் தர ஒரு வீட்டிற்கு ரூ.5 ஆயிரம் வீதம் 4 வீடுகளுக்கு மொத்தம் 20 ஆயிரம் ரூபாயினை லஞ்சமாக கேட்டுள்ளார். ஏற்கெனவே நகராட்சிக்கு உரிய கட்டணத்தை செலுத்திய நிலையில் மேலும் ரூ 20 ஆயிரம் தர இயலாது. எனவே ப்ளானை அப்ரூவல் செய்து தருமாறு பணிவாக கேட்டுள்ளார். ஆனாலும் அந்த அதிகாரி மனம் இறங்கவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த பொறியாளர் நகரமைப்பு திட்ட அதிகாரி பர்குணனை மீண்டும் சந்தித்து ப்ளான் அப்ரூவல் கேட்டுள்ளார். ஆனால் பர்குணனோ, ரூ 20 ஆயிரத்தை கொடுத்தால் இன்றே அப்ரூவல் செய்கிறேன். இல்லையேல் அப்படியே கிடப்பில் போட்டுவிடுவேன் என கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பொறியாளர் இது சம்பந்தமாக லஞ்சம் கொடுக்க விரும்பாத நிலையில், இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுப் போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி, அந்த பொறியாளரிடம் அதிகாரி பர்குணன் கேட்டபடி ரூ.20 ஆயிரத்தை ஜி-பே மூலம் அனுப்பி வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன்படி அவர் பர்குணனின் செல்போன் எண்ணுக்கு ஜி-பே மூலம் பணத்தை அனுப்பிய நிலையில் நகராட்சி அலுவலகம் அருகாமில் மாறுவேடத்தில் நின்று கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனே நகராட்சி அலுவலகத்திற்கு சென்று கட்டிட நகரமைப்பு அதிகாரியான பர்குணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்ததுடன், அவரது செல் போனையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்திய பிறகு பர்குணன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்கள் மத்தியில் பதற்றத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment