Sunday, 8 December 2024

சென்னை அடையார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி அதிரடியாக பணியிடை நீக்கம்!

சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையிலுள்ள காவலர்கள் குடியிருப்பில் அடையார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி என்பவர் வாகன நிறுத்தம் பகுதியிலுள்ள வாகனங்களை அடித்து நொறுக்கியதாக புகார்கள் எழுந்ததது. இது தொடர்பாக போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி தான் அடித்து நொறுக்கியது தெயிரவந்தது. இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையிலுள்ள காவலர்கள் குடியிருப்பில் அடையார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி வசித்து வருகிறார். காவலர் குடியிருப்பில், போலீசாருக்கு என்று உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் 1,000 சதுரடியை போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி தனது சொந்த தேவைக்காக தோட்டம் அமைத்து பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

அந்த குடியிருப்பில் வசிக்கும் உதவி காவல் ஆய்வாளர் இளையராஜா, போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமியிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பினாராம். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஜெயலட்சுமி மற்றும் இளையராஜா குடும்பத்தினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னர் காவலர் குடியிருப்பில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது பற்றி, இளையராஜா, சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையாளர், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தில் புகார் கொடுத்தார். சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்து உள்ளார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜெயலட்சுமி, சவுந்தரராஜன் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்திருந்த இடத்தை காலி செய்ய உத்தரவிட்டது.
இந்த சூழலில் வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் இளையராஜாவின் இருசக்கர வாகனம் உட்பட மேலும் சில வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தது. வாகனங்களின் இருக்கைகள் கத்தியால் குத்தி கிழிக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளையராஜா, இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, மயிலாப்பூர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் வாகனங்களை சேதப்படுத்தியது, போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி என்பது சி.சி.டி.வி. கேமரா மூலம் தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது மயிலாப்பூர் காவல் நிலையத்தில், இளையராஜா புகார் அளித்தார். போலீசார், ஜெயலட்சுமி மற்றும் சவுந்தரராஜன் ஆகியோர் மீது, பொது சொத்தை சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் ஜெயலட்சுமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கான உத்தரவை சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர் ஆர்.சுதாகர் பிறப்பித்திருக்கிறார்.



No comments:

Post a Comment

பருகூரில் (55 வயதாகும்) நபர் தன்னுடைய 7 சென்ட் நிலத்தை அளந்து, தனி பட்டா வழங்கக் கோரியவரிடம் ரூ.9 ஆயிரம் கையூட்டுப் பெற்று புரோக்கருடன்.. சர்வேயர் கைது!

தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை, பதிவுத்துறைகளில் நாளுக்கு நாள் லஞ்ச புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன.. இந்த துறைகளின் சில அதிகாரிகள் ...