ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் வாடிக்கையாளர்கள் வாங்கும் சரக்கிற்கு அவரவர்கள் முன்னிலையிலேயே ஸ்கேன் செய்து ரசீதினை வழங்க வேண்டும் என்றும், மதுபானங்களை முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டு விற்பனை செய்யக் கூடாது என்றும் டாஸ்மாக் நிர்வாகம் ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள 4,829 டாஸ்மாக் கடைகளில், நாள் ஒன்றுக்கு சுமார் 10 லட்சம் மது பாட்டில்கள் விற்பனை ஆகி வருகிறது. தமிழகத்தில் அரசின் டாஸ்மாக், மூலமாகவே மது விற்பனையானது நடக்கிறது. தற்போது காலை 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மது விற்பனையானது நடக்கிறது.
இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, கூடுதலாக பணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து இருந்தது. ஆனால் இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் தான் இருந்தன. இதனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை கணினிமயமாக்கப்பட்டது.
குறிப்பாக, காஞ்சீபுரம் (வடக்கு) மற்றும் காஞ்சீபுரம் (தெற்கு), அரக்கோணம், கரூர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் கணினி மயமாக்கப்பட்டன. இந்த கடைகளில் மதுபானம் ஸ்டாக் உள்ளே வரும்போது மது பாட்டில்கள் ஸ்கேன் செய்யப்படும். பின்னர் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யப்படும் போது ஸ்கேன் செய்து, ரசீது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொடுக்கும் போது ஸ்கேன் செய்யாமல், மொத்தமாக கடை ஊழியர்கள் ஸ்கேன் செய்து வைத்துக்கொண்டு பின்னர் ரசீது வழங்குவதாகவும், இதனால் மொத்த ஸ்டாக்குகள் இருப்புக்கும் விற்கப்பட்ட மதுபாட்டில்களுக்கும் இடையே வித்தியாசம் வருவதாக புகார்கள் வந்தன. கடை விற்பனையாளர்கள் முறையான, உரிய வழிமுறைகளை பின்பற்றமால தவறான செய்லபாடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து தான் தற்போது ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:- மதுபான சில்லரை விற்பனை கடைகளில், மது விற்பனையின் போது வாடிக்கையாளர்கள் விரும்பி கேட்கும் மதுபானங்களுக்கு அதற்கான முறையான ரசீதினை வழங்க வேண்டும். நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யும் போது மட்டுமே பாட்டிலை ஸ்கேன் செய்து கொடுக்க வேண்டும். இந்த மதுபானங்களை ஏற்கனவே முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டு, நுகர்வோர்கள் வந்த பிறகு அவர்களுக்கு விற்பனை செய்யக் கூடாது.
இப்படி விற்பனை செய்வதனால், விற்பனைக்கும் இருப்புக்கும் வித்தியாசம் ஏற்படுகிறது. எனவே இதை கடைக்காரர்கள் சரி செய்ய வேண்டும். மேலும் ஊழியர்களின் தவறான செயல்பாடுகளை கண்காணிக்க தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர் மற்றும் உதவி மேலாளர் முழு பொறுப்பாவதோடு, அவர்கள் மீது துறை ரீதியான உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் வாடிக்கையாளர்கள் வாங்கும் சரக்கிற்கு அவரவர்கள் முன்னிலையிலேயே ஸ்கேன் செய்து ரசீதினை வழங்க வேண்டும். மேலும் இதை செயல்படுத்திட ஆக்கப்பூர்வமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. டாஸ்மாக்கின் இந்த நடவடிக்கை மூலம் கூடுதல் ரூபாய் வசூலிக்கப்படுவது தடுக்கப்படும் என்று மது பிரியர்கள் தெரிவித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment