நாகர்கோவிலிலுள்ள கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு நள்ளிரவில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு எழுந்தது. சென்னையிலுள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வரும் கன்னியாகுமரியைச் சேர்ந்த என்ஜினியர், கடலூர் பெண்ணுடன் பழகியுள்ளார். அந்த கடலூர் பெண் தான் நேற்று நள்ளிரவில் போராட்டம் நடத்தியுள்ளார். விரிவாக பார்க்கலாம்.
சென்னையிலுள்ள ஒரு தனியார் கம்பெனியில் கன்னியாகுமரி மாவட்டம், வாவறை பகுதியைச் சேர்ந்த (32 வயதாகும்) என்ஜினியர் ஒருவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை வேலை செய்து வந்துள்ளார். அப்போது அதே நிறுவனத்தில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த (27 வயதாகும்) பிரியதர்ஷினி என்ற பெண் இன்ஜினியர் வேலை செய்து வந்தாராம். அப்போது 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஜினியர் ஒரு கட்டத்தில் வேறு கம்பெனிக்கு வேலைக்கு சென்றார். இதனை தொடர்ந்து காதலி பிரியதர்ஷினியுடன் பேசுவதையும் தவிர்த்தாராம். இது பிரியதர்ஷினிக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதாம். அவர் கன்னியாகுமரி இன்ஜினியருடன் பேசவும், தன்னை திருமணம் செய்யுமாறு கேட்கவும் அவர் எவ்வளவோ முயற்சி செய்தாராம். ஆனால் முடியவில்லையாம்.
இந்த நிலையில் கன்னியாகுமரி இன்ஜினியருக்கு அவரது சொந்த ஊரில் திருமண ஏற்பாடுகள் நடந்து வருவது பிரியதர்ஷினிக்கு தெரியவந்துள்ளது. இதனிடையே கன்னியாகுமரி இன்ஜினியர் சொந்த ஊரான வாவறைக்கு வந்தார். இதனை அறிந்த காதலி, கவலையுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாவறைக்கு வந்து தன் காதலனான இன்ஜினியர் வீட்டின் முன் அமர்ந்து போராட்டம் நடத்தியிருக்கிறார். அப்போது இன்ஜினியர் தன்னை காதலித்து ஏமாற்றியதாகவும், எனவே அவருடன் சேர்த்து வைக்கும்படியும் வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் காதலனின் வீட்டார் இதற்கு சம்மதிக்கவில்லையாம். இதனால் வேதனை அடைந்த இளம்பெண் திடீரென தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றாராம். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின்னர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு பிரியதர்ஷினி நாகர்கோவிலிலுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் திடீரென காவல் கண்காணிப்பாளர் நுழைவு வாயில் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், "என்னுடைய காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் நடைபெறும் திருமணத்தை தடுத்து நிறுத்தி, எனக்கு அவரை கல்யாணம் செய்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று கதறி அழுதபடி பிரியதர்ஷினி கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி இன்ஜினியரை அழைத்து விசாரணை நடத்த மகளிர் போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment