சொந்தமாக இடம் வாங்கி, அதனை சார் பதிவாளர் அலுவலகத்தில் முறையாக பதிவு செய்து, ஒரிஜினல் பத்திரத்தை கையில் வைத்திருந்தபோதிலும்கூட, மோசடி நடந்திருக்கிறது. இப்படியொரு சம்பவம் சென்னையில் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் போலியான பத்திரங்களை, அச்சு அசல் ஒரிஜினல் போலவே தயார் செய்கிறார்கள் சில மோசடிப்பேர்வழிகள்.. இந்த போலி பத்திரங்களை வைத்துக்கொண்டு, நில அபகரிப்பு முதல் லஞ்சம் பெறுவது வரை ஏராளமான குற்றச்செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.
இதன்காரணமாக பத்திரங்களை பதிவதிலும், மோசடிகள் பெருகிவருகின்றன. இவைகளை களைவதற்கான முயற்சியில் தமிழ்நாடு பதிவுத்துறை நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எனினும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியவில்லை.
உயர் அதிகாரிகளும், பெண் அதிகாரிகளும் என பாரபட்சமின்றி கைதாகி கொண்டிருக்கிறார்கள்.. லஞ்சம் வாங்கி, பொதுவெளியில் கையும் களவுமாக சிக்கி, அம்பலப்பட்டாலும்கூட, அடுத்தடுத்த அதிகாரிகளின் கைது நடவடிக்கைகள் தமிழகத்தில் நடந்து கொண்டேயிருப்பது வேதனையை தந்து கொண்டிருக்கிறது.
பதிவு செய்த பத்திரம் தருவதற்கு லஞ்சம் கேட்டிருந்த, ஒரு சார் பதிவாளர் பற்றின செய்தி மிகப்பெரிய அதிர்வலையை சமீபத்தில் உண்டுபண்ணியிருந்தது.. அதாவது, காரைக்குடியைச் சேர்ந்த வைரவேல் என்பவர், தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்திருக்கிறார்.. இதற்கான பத்திரப்பதிவு காரைக்குடி சார்-பதிவாளர் அலுவலகம் எண்-2-ல் நடைபெற்றது.
ஆனால், பத்திரப்பதிவு முடிந்து பல நாட்கள் ஆகியும் பத்திரம் வழங்கப்படவில்லை. இதனால் நேரில் சென்று வைரவேல் கேட்டதற்கு, ரூ.1 லட்சம் லஞ்சம் வேண்டும் என்று சார் பதிவாளர் முத்துப்பாண்டி கேட்டாராம். இது தொடர்பான புகாரில் சார் பதிவாளர் முத்துப்பாண்டி கைதாகியிருந்தார். இதோ இப்போது இன்னொரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை கண்ணதாசன் நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(74 வயதாகிறது). இவர் கடந்த 1991ம் ஆண்டு செங்குன்றம் அடுத்த புள்ளி லைன் செல்வ விநாயகர் கோயில் நகரில் 1800 சதுர அடி வீட்டுமனை வாங்கியிருக்கிறார். அதை அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து ஒரிஜினல் பத்திரம் வைத்துள்ளார். கடந்த 3 வருடங்களாக உடல்நிலை சரியில்லாததால், இந்த இடத்தை பார்க்காமலேயே இருந்துள்ளார்.
இந்நிலையில் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் செய்து வரும் அழிஞ்சிவாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன்(63 வயது) என்பவர், கடந்த 2016ம் ஆண்டு போலி ஆவணங்கள் தயார் செய்து, அந்த இடத்தை விற்பனை செய்திருக்கிறார்.
இந்த விஷயம் தெரிந்து அதிர்ச்சியடைந்த ராமகிருஷ்ணன், ராஜேந்திரனிடம் இதுபற்றி கேட்டுள்ளார். அதற்கு ராஜேந்திரன், 2 பேருடன் சேர்ந்து ராமகிருஷ்ணனை மிரட்டியிருக்கிறார்.. இதுகுறித்து செங்குன்றம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ராமகிருஷ்ணன் புகார் அளிக்கவும், இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
No comments:
Post a Comment