Monday, 2 December 2024

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு சாலைகளில் மாடுகளால் பொது மக்களுக்கு உயிர் அபாயம்!.. மக்கள் உயிர் முக்கியமில்லையா?

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாலைகளில் உலா வரும் மாடுகளால் மக்கள் ரத்த காயம் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மாடுகளை சாலையில் உலாவவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார். 

ஆனால், வேலூர் மாநகராட்சி 1-2-3-4 ஆகிய மண்டல பகுதிகளில் பணிபுரியும் அதிகாரிகளும், பிற அரசுத் துறைகளும் அதனைக் கண்டுகொள்ளாததால் சாலைகளில் விபத்துகளை சந்திக்கும் அபாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் சில தினங்களாகவே பெஞ்சல் புயலின் காரணமாக கடலோரப் பகுதிலும், பிற மாவட்டங்களில் வெளுத்துக்கட்டிய கனமழையால் திருவண்ணாமலை , கடலூர் , விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் மண் சரிவு தண்ணீர் வீட்டுக்குள் புகுந்து மக்கள் வெளியேறி வரும் சம்பவங்கள் நம் தொலைக்காட்சி வாயிலாக பார்த்திருப்போம். 

இதனைத் தொடர்ந்து வேலூரில் சுற்றுப்பகுதிகளில் பலத்த கனம பெய்த நிலையில் கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிவது அதிகரித்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில், கடந்த சில மாதங்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்டோர் மாடுகள் தாக்கி படுகாயம் அடைந்திருக்கின்றனர்.

மேலும், தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் பொது மக்களை கடித்து அச்சுறுத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வேலூர் மாநகராட்சிப் பகுதிகளில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிவதும், சாலைகளில் மாடுகள் உலாவுவதும் பொதுமக்களை அச்சுறுத்தலில் ஆழ்த்தியுள்ளது.

பெயருக்கு மட்டுமே வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதோடு, மாதத்திற்கு ஒரு முறை கணக்கு காட்டுவதற்காக மாடுகளைப் பிடித்து அபராதம் விதிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும் மாட்டின் உரிமையாளர்கள் கண்டு கொள்வதாக தெரியவில்லை. இந்நிலையில் பல சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவதோடு, வேலூர்  மாநகராட்சி நான்கு மண்டலம் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தொல்லை தரும் வண்ணம் மாடுகளை சாலைகளில் திரிய விட்டால் மாடுகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என வேலூர் மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவிச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார்.

வேலூர் மாநகராட்சி பகுதியில் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் மாடுகளை திரிய விட்டு பொதுமக்களுக்கும், பொது சுகாதாரத்திற்கும் இடையூறு இல்லாமல் தங்களது சொந்த இடத்தில் அடைத்து வைத்து சுகாதார முறையில் கழிவுகளை அகற்றி பராமரித்திட வேண்டும். பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் தொல்லை தரும் வண்ணம் மாடுகளை சாலைகளில் திரிய விட்டால் எவ்வித முன் அறிவிப்புமின்றி மாடுகளை பிடித்து  அடைக்கப்படுவதுடன், மாடுகளின் உரிமையாளருக்கு முதல் முறை மாடு ஒன்றிற்கு ரூ.2,000 வீதமும், இரண்டாம் முறை ரூ.5000 வீதமும், அபராதக் கட்டணம் விதிக்கப்படும்.

அதே உரிமையாளர் மீண்டும் மாடுகளை திரிய விட்டால் மாடுகள் திருப்பி வழங்கப்படாது. மாடுகளை பொது ஏலம் மூலம் விற்பனை செய்து மாநகராட்சி கணக்கில் செலுத்தப்படும். மேலும் 1939ம் வருட தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் பிரிவுகள் 41(1) (3) (4) (8) 42,43,45,47,51 மற்றும் 134ன் கீழ் உரிய நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் காவல் துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார்.

ஆனால் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காலை தொடங்கி இரவு வரை சாலையில் வாக்கிங் செல்வதைப் போல மாடுகள் உலாவருகின்றது.

எனவே வேலூர் மாநகராட்சி நிர்வாகமும், அதிகாரிகளும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. 


ஏற்கனவே வேலூர் மாநகராட்சி மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் சாலையில் மாடு தாக்கி வாகன ஓட்டி ஒருவர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டும், சுகாதார பிரிவு ஊழியர்கள் நடைமுறைப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பும் பொதுமக்கள், மாடுகளை சாலையில் உலாவ விடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, மாநகராட்சி ஆணையாளர் உத்தரவை மதிக்காத மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.




No comments:

Post a Comment

வியாபாரிக்கு மது ஊற்றிக்கொடுத்து இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வைத்து ரகசிய வீடியோ பதிவு: ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய அர்ச்சகர் கைது!

நாகர்கோவிலில் சூப் கடைக்காரருக்கு மது ஊற்றிக்கொடுத்து அவரை போதையில் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க செய்து வீடியோ எடுத்த அர்ச்சகரை போ...