Sunday, 1 December 2024

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் சுத்துப் போடும் போலீசார்.. டிமிக்கி கொடுக்கும் போதை மாஃபியாக்கள்!

போதை மாத்திரைகள் புழக்கம் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. டாஸ்மாக் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் இளைஞர்கள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள்கள், கள்ளச்சாராயம், குட்கா உள்ளிட்ட மாற்று போதைப் பொருட்களைத் தேடிச் செல்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் அண்மைக் காலமாக போதை மாத்திரைகளை அதிக அளவில் நாடி வருவதாக கூறப்படுகிறது.

ஆல்கஹால் அளவு அதிகம் உள்ள சிரப் வகை மருந்துகள், வலி நிவாரணிகள், தூக்க மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்துக் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. ஆனாலும் விதிகளை மீறி சில மருந்துக் கடைகளில் இதுபோன்ற மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. மெத்தப்பட்டமைன், சூடோ எபித்ரின் உள்ளிட்ட போதைப் பொருட்களால் இளைஞர்கள் குறிப்பாக பள்ளிக்கூடம், கல்லூரி மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர். மேலும் மெடிக்கல்களில் போதை மாத்திரைகள் போதை மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் போலீசாரின் கெடுபிடிகள் காரணமாக மொபைல் அப்ளிகேஷன்கள் மூலம் போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கடந்த சில நாட்களாகவே போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக எபித்ரின், மெத்தப்பட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும். அதிமுக கட்சி பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சென்னையில் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தப்பட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியான தூத்துக்குடி, ராமநாதபுரம் வழியாக கடத்தப்படவந்த கோடிக்கணக்கான ரூபாய் போதைப் பொருட்கள் பறிமுதல் போலீஸாரால் செய்யப்பட்டது.

இதற்கிடையே கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் போதை பொருட்களுடன் பிடிபடும் சம்பவமும் அதிகரித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையிலுள்ள வணிக வளாகம் ஒன்றில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை அடுத்து அங்கு சென்ற போலீசார் ஒரு இளம் பெண்ணை சோதனை செய்தபோது அவரிடம் 5 கிராம் அளவில் மெத்தபெட்டைமைன் இருந்தது தெரியவந்தது. 2000 ரூபாய்க்கு போதைப் பொருளை வாங்கி 3000 ரூபாய்க்கு அவர் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவரது பெயர் மீனா என்பதும் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி என்ற சீரியலில் நடித்து வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர் அளித்த தகவலின் பேரில் போதைப் பொருள் விற்பனைக் கும்பலும் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போதைப் பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 14000 மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, 28000 கிலோ கஞ்சா, 63 ஆயிரம் மாத்திரைகள், 98 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.


மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகள், குடியிருப்புகளில் சோதனை நடத்தி கைது செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இப்படி போலீசார் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் போதைப் பொருள் விற்பனை கும்பல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. ஆட்கள் மூலம் போதைப் பொருள் விற்பனை செய்தால் மாட்டிக் கொள்வோம் என்பதால் தற்போது மொபைல் அப்ளிகேஷன்கள் மூலமும் ஆன்லைன் மூலமும் போதைப்பொருள் விற்பனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக வலி நிவாரணி மாத்திரைகள், தூக்க மாத்திரைகள், இருமல் மருந்துகள் போதை மருந்துகளாக பயன்படுத்தப்படுகின்றன. இதனை ஐடி ஊழியர்கள், கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மொத்தமாக ஆர்டர் செய்து உண்மை பெயரை மறைத்து வேறு பெயர்களில் இவை விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மொபைல் அப்ளிகேஷன்கள் மூலம் போதைப் பொருட்களை ஆர்டர் செய்தால் வீடுகளிலேயே மருந்துகள் என்ற பெயரில் டெலிவரி செய்வதாக கூறப்படுகிறது.

இது போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் மாணவர்களின் சிந்திக்கும் திறன் பாதிக்கப்படுகிறது. மேலும் உடல் நல பாதிப்பு, மூளை செயலிழப்பு வரை செல்லும் என்கின்றனர் மருத்துவர்கள். அதே நேரத்தில் ஆன்லைனில் அதிகளவு மருந்துகளை ஆர்டர் செய்த பெறுபவர்களை கண்காணிக்க வேண்டும், சட்ட விரோத செயல்களை சைபர் கிரைம் போலீசாரும் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.



No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...