Tuesday, 3 December 2024

திருவண்ணாமலையில் திறந்து 90வது நாளிலேயே அடித்து செல்லப்பட்ட பாலம்.. தமிழ்நாடு அரசு விளக்கம்!

தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பலத்த மழை பெய்து புதுச்சேரி மாநிலம், சென்னை, செங்கல்பட்டு திருவண்ணாமலை , விழுப்புரம், தூத்துக்குடி , கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் கடலோரப் பகுதிகளில் அதிக அளவில் சேதங்களை ஏற்படுத்தி விட்டு சென்றது ஃபென்சல் புயல் தொடர்ந்து, தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கில் திருவண்ணாமலை மாவட்டம்,  அகரம்பள்ளிப்பட்டு - தொண்டமானூரை இணைக்கும் உயர்மட்ட பாலம் அடித்துச் செல்லப்பட்டது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை மந்திரி எ.வ.வேலு திறந்த 90 நாட்களில் பாலம் சேதமடைந்த நிலையில், கடுமையாக விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் பாலம் சேதமடைந்ததற்கான காரணம் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் கடந்த 29ஆம் தேதி பெஞ்சல் புயல் கரையை கடந்தது. இதன் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.

மேலும் சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், தண்டரம்பட்டு அருகே அகரம்பள்ளிப்பட்டு - தொண்டமுனூர் கிராமங்களை இணைக்கும் உயர்மட்ட பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

16 கிராம மக்கள் பயன் பெறும் வகையில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் நெடுஞ்சாலை துறை மூலம் இந்த பாலம் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. கடந்த செப்டம்பர் இரண்டாம் தேதி பணிகள் முடிவடைந்த நிலையில் நெடுஞ்சாலை துறை மந்திரி எ.வ.வேலு இந்த பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக சாத்தனூர் அணை நிரம்பி சுமார் ஒன்றரை லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


இதனால் கட்டி முடிக்கப்பட்டு திறந்து மூன்று மாதங்களே ஆன நிலையில் பாலம் இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், தரமின்றி கட்டப்பட்டுள்ளதாக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி கடும் விமர்சனங்களை முன் வைத்தனர். இந்த நிலையில் பாலம் சேதம் அடைந்தது தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

அதில்,”அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.15.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் தற்போது 30.11.2024 மற்றும் 1.12.2024 ஆகிய நாட்களில் ஃபெஞ்சல் புயலால் பெய்த வரலாறு காணாத மழையின் காரணத்தினால் ஏற்பட்ட பெரும் வெள்ளபெருக்கினால் சேதமடைந்தது.


இந்த பாலம், நீளம் 250 மீ (20.8 மீ நீளத்தில் 12 கண்கள்), அகலம் 12 மீ, ஆண்டு சராசரி மழை அளவு, சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, வேகம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, ஆற்றுபடுக்கையில் இருந்து வடிவமைக்கப்பட்ட நீர்வழியின் உயரம் - 5 மீ. மற்றும் பாலத்தின் உயரம் - 7 மீ. நீரியியல் கணக்கீட்டின்படி பாலத்தின் நீர்வெளியேற்றம் (Design Discharge) 54,417 கன அடி. திறந்த வெளி அடித்தளம் மற்றும் 11 வட்ட வடிவ தூண்கள் அமைத்து பாலம் நல்ல தரத்துடன் கட்டிமுடிக்கப்பட்டது.


தற்போது, ஃபெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத வகையில் 450 மி.மீ மேல் பெய்த கன மழையினால், சாத்தனூர் அணையிலிருந்து வழக்கமாக வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விட நான்கு மடங்கு அதிகமாக அதாவது 2,00,000 கனஅடிக்கு மேல் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

மேலும் இப்பாலமானது, அணையிலிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ளதால், தொடர் மழையினால் பாம்பாறு மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளநீரும், இணைந்து இப்பாலத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பாலத்தின் மேற்பரப்பிற்கு மேல் சுமார் 4 மீட்டர் உயரத்திற்கு நீரின் வேகம் அதிகரித்து ஓடியதால் இப்பாலம் பெரும் சேதமடைந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதியை ஆய்வு செய்து மீண்டும் பாலம் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என கூறப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment

விடுதலைப்புலிகள் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியதா ஆதாரத்தை காட்டுங்கள் சீமான்!

பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியது என்றால், அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒ...