அ.தி.மு.க., ஆட்சியில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில், 'சோலார்' விளக்குகள் வாங்கியதில், 3.72 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக, பி.டி.ஓ.,க்கள் உட்பட, 11 பேர் மீது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே, கருக்காகுறிச்சியைச் சேர்ந்தவர் முருகானந்தம்(53 வயது), இவரது அண்ணன் ரவிச்சந்திரன்(55வயது); தம்பி பழனிவேல்(50வயது). இவர்களில் பழனிவேல், அ.தி.மு.க., மாவட்ட இளைஞர் அணி செயலராக உள்ளார்.
அ.தி.மு.க., ஆட்சியில், 2019 - 2020ல், இம்மாவட்டத்திலுள்ள மணமேல்குடி, கந்தர்வக்கோட்டை, திருவரங்குளம், அறந்தாங்கி, அரிமளம், கறம்பக்குடி, குன்னாண்டார்கோவில், திருமயம் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில், தெருக்களில் பொருத்த சோலார் மின் விளக்குகள் வாங்கியதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, சென்னை லஞ்ச ஒழிப்பு துறை தலைமை அலுவலகத்தில், அந்த துறையின் துணை காவல் கண்காணிப்பாளர் மாயவரம்பன் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பழனிவேலுக்கு சொந்தமான நாகா டிரேடர்ஸ் மற்றும் முருகானந்தம் மனைவி காந்திமதி நடத்தி வரும் வீரா ஏஜென்சி, ஷேக் அப்துல்லா நடத்தி வரும் ஹெச்.எஸ்.பி., ஆகிய நிறுவனங்களில் இருந்து, சோலார் விளக்குகள் வாங்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. அதாவது, 30 வாட்ஸ் ஒரு சோலார் விளக்கு, 10,952 ரூபாய்க்கு பதிலாக, 59,900 ரூபாய்க்கு கூடுதல் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.
அதன்படி, கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு, காந்திமதி, ஷேக் அப்துல்லா நிறுவனங்களிடம் இருந்து, 72 சோலார் விளக்குகள், 43 லட்சத்து 55,928 ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டுள்ளன.
இப்படி, 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கும், 799 சோலார் விளக்குகளை, கூடுதல் விலைக்கு வாங்கி, 3.72 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்திருப்பதும், அதற்கு, பி.டி.ஓ.,க்கள் என்ற ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், பழனிவேல், காந்திமதி, ஷேக் அப்துல்லா மற்றும் பி.டி.ஓ.,க்கள் அறந்தாங்கி சிவகாமி, அரிமளம் ஆயிஷாராணி, கறம்பக்குடி ரவி, திருமயம் சங்கர், கந்தர்வக்கோட்டை அரசமணி, மணமேல்குடி ரவிச்சந்திரன், குன்னாண்டார்கோவில் கலைச்செல்வி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய கண்காணிப்பாளர் அசோகன் என, 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment