தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் தனது கட்சி மாநாட்டிற்கு பிறகு முதன்முதலாக பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார் என்ற தகவல் வெளியான போதே தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள வர்த்தக மையத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' எனும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பேசிய நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், "சம்பிரதாயத்துக்காக ட்வீட் போடுவதிலும், அறிக்கை விடுவதிலும் எனக்கு கொஞ்சம்கூட உடன்பாடில்ல" என்று கூறியுள்ளார். இக்கருத்து அரசியல் தளத்தில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை எனப் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கர் குறித்து பல்வேறு தரப்பினர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கலந்துக் கொண்டார். வெளியீட்டு விழாவில் இந்த நூலை வடிவமைத்த ஆதவ் அர்ஜுனா குறித்த வீடியோவில் ' 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வேலை செய்ய பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்ததே ஆதவ் அர்ஜுனா தான்" என கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொகுத்த நூல் வெளியிடப்பட இருப்பதாகவும், அதில் திருமாவளவனும் கலந்து கொள்கிறார் என்ற அறிவிப்பும் அதனைத் தொடர்ந்து விவாதங்களும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என திருமாவளவன் கூறினார். இதை அடுத்து பல்வேறு விவாதங்கள் எழுந்தது. இந்த நிலையில் நூலை உருவாக்கிய ஆதவ் அர்ஜுனா நிகழ்ச்சியில் நீதியரசர் சந்துரு கலந்து கொள்வார் எனவும் அம்பேத்கரின் பேரனான ஆனந்த் கலந்து கொள்வார் எனவும் அறிவித்தார். இதை அடுத்து திட்டமிட்டபடி நேற்று நிகழ்ச்சி தொடங்கியது.
விழாவுக்கு தனது வழக்கமான வெள்ளை சட்டையுடன் வந்த விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புத்தகத்தை உருவாக்கிய ஆதவ் அர்ஜுனா குறித்து வீடியோ ஒன்று விழா மேடையில் ஒளிபரப்பப்பட்டது. அதில், ஆதவ் அர்ஜுனா வாய்ஸ் ஆப் காமன் என்ற நிறுவனத்தை தொடங்கியது அரசியலில் அவரது ஈடுபாடு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தது குறித்து விவரிக்கப்பட்டது. அதில்," அம்பேத்கரின் கொள்கைகளை செயல்படுத்த முடியாமல் போனது. காரணம் அதற்கு ஏற்ற அரசுகள் அமையவில்லை. அம்பேத்கரின் கொள்கைகளை செயல்படுத்தும் அரசியல் கட்சிகளும் இல்லை. இதை அடுத்து அரசியல் பாதையை தேர்ந்தெடுத்தார் ஆதவ் அர்ஜுனா.
2015 ஆம் ஆண்டு திமுகவுக்கு தேர்தல் யூகங்கள் வகுத்துக் கொடுக்கும் குழுவில் இணைந்தார். 2019 ஆம் ஆண்டு திமுக தேர்தல் வியூகங்கள் குறித்து செயல்படுத்துவதற்காக 'ஒன் மைண்ட் இந்தியா' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இந்த நிறுவனம் தமிழகத்தின் 234 தொகுதிகளையும் பகுப்பாய்வு செய்து தேர்தல் வியூகத்தை கட்டமைத்தது. திமுகவுக்கான தேர்தல் உத்திகளை நவீனப்படுத்தவும் ஐ பாக் நிறுவனத்தின் தலைவரும், தேர்தல் வியூக கணிப்பாளர் பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்தவர் ஆதவ் அர்ஜுனா. அவருடன் இணைந்து 2021 ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் முக்கிய பங்காற்றியவர் ஆதவ் அர்ஜுனா.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதன்பின் அடித்தட்டு மக்களுக்கும் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து கொடுத்து ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தில் ஒன் மைண்ட் இந்தியா நிறுவனமானது வாய்ஸ் ஆப் காமன் என்ற மக்கள் இயக்கமாக உருவெடுத்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் 2022 ஆம் ஆண்டு வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனம் கைகோர்த்தது கட்சி நிர்வாகத்தை சீரமைப்பது தொடங்கி டிஜிட்டல் தரவுகளை கையாள தனி டாஷ்போர்டு கொண்டுவரப்பட்டது" எனக் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் தேர்தல் வியூக கணிப்பாளர்களில் முதன்மையாக கருதப்படுபவர் பிரஷாந்த் கிஷோர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளுக்கு வியூகங்களை வகுத்து கொடுக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுக்கு வியூகங்களை வகுத்து கொடுத்து அந்த கட்சிகளை வெற்றி பெறவும் செய்திருக்கிறார்.
தேர்தல் வியூகங்கள் பணியை கைவிட்ட இவர், அரசியல் தொடர்பான கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வந்தார். பீகார் மாநில அரசியலில் அதிக ஆர்வம் காட்டிய பிரஷாந்த் கிஷோர், ‘ஜன் சுராஜ்’ எனும் இயக்கத்தை தொடங்கி மாநிலம் முழுவதும் சுமார் 3,000 கி.மீ பாதயாத்திரை மேற்கொண்டு மக்களை சந்தித்து ஆதரவை பெற்று வந்தார். 2 ஆண்டுகளாக தொடர்ந்து பாதயாத்திரை மேற்கொண்டு வந்த பிரஷாந்த், தனது இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்தார். ‘ஜன் சுராஜ்’ எனும் கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கிய பிரஷாந்த் கிஷோர், தேர்தல் அரசியலிலும் போட்டியிடப்போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் காலியானதாக அறிவிக்கப்பட்ட ராம்கார், தராரி, பெலகஞ்ச் மற்றும் இமாம்கஞ்ச் ஆகிய 4 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை (23-11-24) அன்று நடந்து முடிந்தது, இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான பா.ஜ.க கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. புதிதாக கட்சி ஆரம்பித்த பிரஷாந்த் கிஷோர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நான்கு தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment