நடிகர் அஜித் குமாரை கடந்த சில நாட்களாக மத்திய மாநில அரசுகள் கொண்டாடுவது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இதற்கு பின் அரசியல் தாண்டிய காரணம் உள்ளது.
பத்மபூஷண் விருது நடிகர் அஜித் குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு இந்த உயரிய விருது தருவது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
பத்மபூஷண் விருது தொடர்பாக நடிகர் அஜித் வெளியிட்ட அறிக்கையில், குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
இந்த மதிப்புமிக்க கெளரவத்திற்காக, மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு மற்றும் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன்.
இந்த அங்கீகாரம் தனிப்பட்ட முறையில் எனக்கானது மட்டுமல்ல. இதனை சாத்தியப்படுத்திய பலரது உழைப்பும் இதில் அடங்கும் என்பதை உணர்வேன். எனது மதிப்பிற்குரிய திரைத்துறையினர், திரைத்துறை முன்னோடிகள், என் நண்பர்கள் உட்ப அனைவருக்கும் எனது நன்றி. உங்கள் உத்வேகம், ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு ஆகியவை எனது பயணத்தில் உறுதுணையாக இருந்ததோடு எனக்கு விருப்பமாக இருந்த மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த உதவியது.
பல ஆண்டுகளாக எனக்கு ஆதரவு கொடுத்த எனது மோட்டார் ரேசிங் நண்பர்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல், ரைஃபிள் ஷூட்டிங் நண்பர்களுக்கும் நன்றி. மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (MMSC), இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (FMSCI), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT), இந்திய தேசிய ரைஃபிள் சங்கம் மற்றும் சென்னை ரைஃபிள் கிளப் ஆகியவை ஊக்கமளித்ததற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது குடும்பம் மற்றும் நண்பர்களின் அளவற்ற அன்பும் ஆதரவும்தான் எனது பலம். நன்றி!
இந்த நாளைக் காண என் மறைந்த தந்தை இப்போது என்னுடன் இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனாலும், நான் செய்யும் எல்லாவற்றிலும் அவரது வழிகாட்டுதல் இருக்கிறது என்பதில் அவர் பெருமைப்படுவார். என் அம்மாவின் நிபந்தனையற்ற அன்புக்கும், நான் என்னவாக விரும்பினேனோ அதுவாக மாற உதவிய அவரது தியாகங்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
கடந்த 25 ஆண்டுகளில் எனது அனைத்து சந்தோஷங்களிலும் வெற்றிகளிலும் துணையாக இருந்த என் மனைவியும் தோழியுமான ஷாலினி எனது பக்கபலம். என் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக்தான் என் பெருமை மற்றும் என் வாழ்க்கையின் ஒளி! சிறப்பாக செயல்படுவது மற்றும் சரியாக வாழ்வது எப்படி என்பதற்கு ஒரு முன்மாதிரியாக இருக்க என்னை ஊக்குவிக்கிறீர்கள்.
எனது ரசிகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத அன்பும் ஆதரவுமே என்னை அர்ப்பணிப்புடன் இருக்க உந்துகிறது. இந்த விருது என்னுடையது போலவே உங்களுக்கும் உரியது.
இந்த கெளரவத்திற்கும், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் அனைவருக்கும் நன்றி. நேர்மையுடனும் ஆர்வத்துடனும் தொடர்ந்து செயல்பட நான் உறுதிபூண்டுள்ளேன். என்னுடைய பயணத்தில் நான் உற்சாகமாக இருப்பதைப் போலவே உங்கள் அனைவரது பயணமும் உற்சாகமாகவும் வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துக்கள்!, என்று கூறி உள்ளார்.
அஜித் ரேஸிங்:
அதேபோல் நடிகர் அஜித் கலந்து கொண்ட துபாய் ரேஸில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை லோகோ பயன்படுத்தப்பட்டது. இதை தமிழ்நாடு அரசும் கொண்டாடியது. மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நமது #திராவிட_மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் - #Formula4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு எங்கள் அன்பும், நன்றியும். விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார்., என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூட இதை பாராட்டி இருந்தார்.
நடிகர் அஜித்தை கடந்த சில நாட்களாக மத்திய மாநில அரசுகள் கொண்டாடுவது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இதற்கு பின் அரசியல் தாண்டிய காரணம் உள்ளது.
1. அஜித் அரசியல் பேச மாட்டார். எந்த கட்சிக்கும் நேரடியாக, மறைமுகமாக ஆதரவு தர மாட்டார்.
2. அஜித்திற்கு ரசிகர் மன்றம் இல்லை, அஜித்தை கொண்டாடுவதால் அவரின் மன்றம் எந்த கட்சிக்கும் பணியாற்றாது. ஏனென்றால் அவருக்கு மன்றமே இல்லை. அப்படி இருக்க அவரை கொண்டாட அரசியல் காரணம் இருக்காது.
3. மாறாக அவர் சினிமா தாண்டி டிரோன் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்குகிறார், இதற்காக அரசுடன் சேர்ந்து செயல்படுகிறார்.
4. உலக அளவில், இந்திய அளவில் நீண்ட தூர பயணத்தை முறையான திட்டமிடலுடன் நடத்துவதோடு.. அதில் குழுக்களையும் சேர்க்கிறார்.
5. துப்பாக்கி சூடு போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார்.
6. துபாய் உள்ளிட்ட சர்வதேச அரங்கில் பார்முலா போட்டிகளில் வென்றுள்ளார்.
இதை எல்லாம் சினிமாவில் இருந்து கொண்டே அஜித் செய்துள்ளார்.இதை விட ஒரு நடிகருக்கு பத்ம விருது பெறுவதற்கு பெரிய தகுதி தேவை இல்லை. இதுவே அவரை மத்திய மாநில அரசுகள் கொண்டாட முக்கிய காரணம் ஆகும்.
No comments:
Post a Comment