மாதம்தோறும் அமாவாசை வந்தாலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. தை அமாவாசையன்று பித்ரு லோகம் புறப்படும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகச் சிறந்த பலன்களை அளிக்கும். அதே நேரத்தில் பித்ருகளின் சாபம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து கருட புராணம் விளக்கி இருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வருகிறது. அதே நேரத்தில் ஆடி மாசம் வரும் அமாவாசை, புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசை, தை அமாவாசை போன்றவை அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.
தை அமாவாசை தினத்தில் முன்னோர்கள் நினைத்து தர்ப்பணம் கொடுப்பதும் இறை வழிபாடு நடத்துவதும் மிகச் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு தை அமாவாசை 29ஆம் புதன்கிழமையான இன்று வந்துள்ளது.
நேற்று 28ஆம் தேதியன்று இரவு 8.10 மணிக்கு தொடங்கிய அமாவாசை ஜனவரி 29ஆம் தேதியன்று இரவு 7.12 மணி வரை தொடர்கிறது. இந்த நேரத்தில் பித்ரு தர்ப்பணம் கொடுப்பது மிகச்சிறந்த பலன்களை அளிக்கும் என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள். அதே நேரத்தில் தை அமாவாசைக்கும், ஆடி அமாவாசைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. ஆடி அமாவாசை அன்று பித்துரு லோகத்திலிருந்து உலகிற்கு வரும் முன்னோர்கள், மகாளய அமாவாசையில் நம் வீட்டு முன்பு நின்று நாம் படைக்கும் உணவுகளையும் தர்ப்பணங்களையும் ஏற்றுக் கொள்கின்றனர்
அதற்குப் பிறகு அவர்கள் தை அமாவாசையில் மீண்டும் பித்ரு லோகம் புறப்பட்டுச் செல்வதாக ஐதீகம். அதன் காரணமாகத் தான் இந்த மூன்று அமாவாசைகளும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மறைந்த தாய், தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள் உள்ளிட்ட முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய முக்கிய கடமை இருக்கிறது. அதன் காரணமாகத் தான் சாதத்தை ஆறு பிண்டங்களாக வைத்து எள், தண்ணீர், தர்பை கொண்டு அவர்களை பூஜிக்க வேண்டும்.
ஆறு பிண்டங்களையும் இணைத்து காகத்திற்கு வைக்கும் போது நம் முன்னோர்களை அவற்றை உணவாக எடுத்துக் கொள்வதாக நம்பிக்கை. இந்த தர்ப்பணம் பித்ருகளின் குறைகள், கோபங்களை தணிக்கும். அவர்களின் மனதை குளிரச் செய்து குடும்பத்தில் எழுந்த பிரச்சனை இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். பித்ரு கடமை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என சிவபெருமான் ஸ்ரீராமரிடம் சொல்லியிருக்கிறார். அதனால் தான் வனவாச காலத்தில் இருந்த போது தந்தைக்குச் செய்ய முடியாத தர்ப்பணத்தை ராமேஸ்வரத்தில் வைத்து ராமபிரான் செய்தார் என்கிறார்கள்.
ஒருவேளை பித்ருகளுக்கு நாம் தை அமாவாசையில் தர்ப்பணம் செய்யாவிட்டால் என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும் என்பதை விளக்கி இருக்கிறது கருட புராணம். நம் முன்னோர்களுக்கு சிரத்தையுடன் செய்யும் காரியம் என்பதால் இது 'சிரார்த்தம்' என அழைக்கப்படுகிறது. எனவே தை அமாவாசை திதி அன்று ஆறு கடல் உள்ளிட்ட நீர் நிலைகளின் நீராடி முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படையில் வைத்து தர்ப்பணம் செய்து விரதம் கடைபிடிக்கலாம். தொடர்ந்து வீட்டில் கிழக்குப் பக்கமாக முன்னோர்களின் புகைப்படங்களை வைத்து அவர்களுக்கு பிடித்தவற்றை படைத்து காகங்களுக்கு உணவாக வழங்கலாம்.
தை அமாவாசை அன்றுதான் பித்ருலோகம் புறப்படும் முன்னோர்களுக்கு தாகம் அதிகமாக இருக்கும் அதன் காரணமாகத்தான் அன்று நீர்நிலைகளில் எள், தண்ணீர் தெளித்து தர்ப்பணம் செய்கிறோம். அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள். 'பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால் கூட கருணை காட்ட முடியாது' என்கிறது கருட புராணம். எனவே நிச்சயமாக தை அமாவாசையான இன்று உங்கள் முன்னோர்களுக்கு வழிபாடு நடத்துவது சிறந்த பலன்களை தரும்.
No comments:
Post a Comment