பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் சிறப்பான சேவையாற்றியவர்களை கௌரவிக்க 1954 இல் நிறுவப்பட்டன. பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ என மூன்று பிரிவுகளாக வழங்கப்படும்.
நாட்டின் மிக உயரிய குடிமை விருதுகளான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் சிறப்பான சேவையாற்றியவர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படுவதாகும். தற்போது பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை குடியரசு தலைவர் அறிவித்துள்ள நிலையில், இந்த விருதுகள் எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பதை பார்க்கலாம்.
பத்ம விருது வென்றவர்களின் பெயர்கள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தின் முந்தைய நாள் அறிவிக்கப்படும். “பொது சேவை சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளிலும் சாதனைகளைப் புரிந்தவர்களை” அங்கீகரிக்கும் நோக்கத்துடன் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. பிரதமரால் ஒவ்வொரு ஆண்டும் அமைக்கப்படும் பத்ம விருதுகள் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், குடியரசுத் தலைவரால் பொதுவாக மார்ச்/ஏப்ரல் மாதத்தில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவின் மிக உயர்ந்த குடிமை விருதான பாரத ரத்னாவுடன், பத்ம விருதுகளும் 1954 இல் நிறுவப்பட்டன. ஆரம்பத்தில், இந்த விருது பத்ம விபூஷன் என்று அழைக்கப்பட்டது மற்றும் பஹேலா வர்க், துஸ்ரா வர்க் மற்றும் திஸ்ரா வர்க் என மூன்று பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஆனால் இந்த பெயர்கள் பின்னர் 1955 இல் குடியரசுத் தலைவர் அறிவிப்பின் மூலம் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ என மாற்றப்பட்டன.
குறிப்பாக, பத்ம விபூஷன் “சிறப்பான மற்றும் தனித்துவமான சேவைக்காகவும்”, பத்ம பூஷன் “உயர்ந்த தரத்தின் தனித்துவமான சேவைக்காகவும்”, மற்றும் பத்மஸ்ரீ “தனித்துவமான சேவைக்காகவும்” வழங்கப்படுகிறது.
பத்ம விருதுகள், 1978, 1979, 1993 - 1997 ஆகிய ஆண்டுகளை தவிர, அனைத்து ஆண்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சகத்தால் பராமரிக்கப்படும் பத்ம விருதுகள் இணையதளத்தின்படி, இனம், தொழில், பதவி அல்லது பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு இந்திய குடிமகனும் இந்த விருதுகளுக்குத் தகுதியுடையவர். ஆனால் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இந்த விருதுகளுக்குத் தகுதியற்றவர்கள். ஆனால் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கலை, சமூக சேவை, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் விளையாட்டு போன்ற எந்தத் துறையிலிருந்தும் விருது பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம்.
ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் பத்ம விருதுகளின் மொத்த எண்ணிக்கை 120 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த எண்ணிக்கையில் மரணத்திற்குப் பின் விருதுகள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் அல்லது இந்திய வம்சாவளி குடிமகன் அல்லது வெளிநாட்டு வெற்றியாளர்கள் விலக்கப்படுகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் விருதுக்கான பரிந்துரைகள் பொதுவாக மே 1 முதல் செப்டம்பர் 15 வரை அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடமிருந்து பெறப்படுகின்றன. கடந்த கால பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷன் விருது பெற்றவர்கள் மற்றும் சிறப்பு நிறுவனங்களும் மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பெயர்களை முன்வைக்கலாம்.
தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களும் கூடபரிந்துரைகளை செய்யலாம். மேலும் “எனக்கு விருது கொடுங்கள்” என சுய பரிந்துரையையும் செய்யலாம்.
2018 ஆம் ஆண்டில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில், வருடாந்திர கௌரவங்களுக்கான பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நபரின் “தனித்துவமான மற்றும் சிறப்பான சாதனைகள் / சேவையை தெளிவாக வெளிப்படுத்தும்” அதிகபட்சம் 800 வார்த்தைகள் கொண்ட மேற்கோளுடன் நிர்ணயிக்கப்பட்ட வடிவத்தின் படி பத்ம விருதுகள் இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
விருது பெறுபவரைத் தேர்ந்தெடுப்பதற்கு “கடினமான அளவுகோல்கள் அல்லது சரியான சூத்திரம் இல்லை” என்றும் ஆனால் “ஒரு தனிநபரின் வாழ்நாள் சாதனை”-யை கருத்தில் கொண்டு வழங்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
பத்ம விருதுகள் ‘சிறப்பு சேவைகளுக்காக’ வழங்கப்படுகிறது. ஒருவர் நீண்ட காலமாக செய்யும் சேவைக்காக அல்ல. ஒரு குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்கினால் மட்டும் இந்த விருதுகளுக்கு தகுதியானவராக முடியாது. ‘அதிசிறப்பாக’ இருக்க வேண்டும் என்று பத்ம விருதுகள் தேர்வு அளவுகோல் கூறுகிறது.
பத்ம விருதுகள் குழுவால் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள், பின்னர் அவர்களின் பெயர்கள் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்த குழு மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் உள்துறை செயலாளர், குடியரசுத் தலைவரின் செயலாளர் மற்றும் நான்கு முதல் ஆறு முக்கிய நபர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.
பத்ம விருதுகளில் பணப் பரிசு எதுவும் இல்லை. குடியரசுத் தலைவரால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ் மற்றும் பதக்கம் மட்டுமே வழங்கப்படும். வெற்றியாளர்களுக்கு பதக்கத்தின் சிறிய பிரதியும் வழங்கப்படுகிறது, “அவர்கள் விரும்பினால் எந்தவொரு விழா / அரசு விழாக்களிலும் அணியலாம்” என கூறப்பட்டுள்ளது. விருது பெற்றவர்களின் பெயர்கள் விருது வழங்கும் நாளில் இந்திய அரசிதழில் வெளியிடப்படும். மேலும், இந்த விருது விருது பெற்றவர்களின் பெயருக்கு முன்னொட்டாகவோ பின்னொட்டாகவோ பயன்படுத்தக்கூடிய பட்டத்தை குறிக்காது.
நாட்டின் மிக உயர்ந்த குடிமை கௌரவமான பாரத ரத்னாவிலும் பணப் பரிசு இல்லை. ஆனால் அரசு விழாக்கள், அரசுக்கு சொந்தமான கேரியர்கள் மூலம் பயணம் செய்யும்போதோ, அல்லது மாநிலங்களுக்குள் பயணம் செய்யும்போதோ, அவர்களது பாஸ்போர்ட்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment