Monday, 27 January 2025

4 பேரை திருமணம் செய்ததை மறைத்து 5வதாக வங்கி ஊழியரை மணந்த கல்யாண ராணி: டாக்டர், நர்ஸ் என ஏமாற்றி காதல் வலை விரித்தது அம்பலம்!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் ஏற்கனவே 4 பேரை திருமணம் செய்த கல்யாண ராணி 5வதாக வங்கி ஊழியர் ஒருவரை காதலித்து திருமணம் செய்தபோது வைக்கப்பட்ட பேனர் வலைதளங்களில் பரவியதால் போலீசில் வசமாக சிக்கியுள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்ததில் டாக்டர், நர்ஸ் என ஏமாற்றி காதல் வலை விரித்தது அம்பலமானது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொடியம்பாளையம் மீனவர் கிராமத்தில் வசிப்பவர் லட்சுமி (வயது29). 12ம்வகுப்பு வரை படித்துள்ள இவர், பழையார் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிலம்பரசன் இறந்து விட்டதால் குழந்தைகளை தனது பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார். கடந்த 2017ல் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெயிண்டர் நெப்போலியனை சந்தித்த லட்சுமி, தனது பெயர் மீரா எனவும், நர்ஸ் வேலை பார்ப்பதாகவும் கூறி அவரை காதலித்து 2வதாக திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரை பிரிந்து, 2021ம் ஆண்டு சிதம்பரம் கோல்டன் நகரில் வசித்து வந்த கோயம்புத்தூர் ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ராஜா என்பவருடன் சேலம் பேருந்து நிலையத்தில் லட்சுமிக்கு தொடர்பு ஏற்பட்டது. அவரிடம் தனது பெயர் நிஷாந்தினி என்றும், எம்பிபிஎஸ், எம்எஸ் படித்து உள்ளதாகவும் கூறி அவரை காதலித்து 3வதாக திருமணம் செய்து கொண்டார்.

அவருடன் சிதம்பரத்தில் 2 வருடம் குடும்பம் நடத்தி வந்துள்ளார். கடந்த 2024ம் ஆண்டு சீர்காழி திட்டை கிராமத்தைச் சேர்ந்த தனியார் வங்கியில் பணியாற்றும் சிவசந்திரனிடம் லிப்ட் கேட்டு பைக்கில் சென்ற லட்சுமி தன்னை டாக்டர் என அறிமுகம் செய்துகொண்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் வேலை பார்ப்பதாக கூறி பழகியுள்ளார். இந்நிலையில் கடந்த 20.01.2025 அன்று சிவச்சந்திரன், சீர்காழியில் லட்சுமியை தடபுடலாக விழா நடத்தி திருமணம் செய்துள்ளார். இதற்காக அவரது நண்பர்கள் வைத்த பேனர் சமூக வலைதளங்களில் பரவியது. இதை பார்த்த முன்னாள் கணவர் நெப்போலியன் அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து அவர், சிவச்சந்திரனை தொடர்பு கொண்டு லட்சுமிக்கும் தனக்கும் ஏற்கனவே திருமணம் ஆனதாக கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிவச்சந்திரனிடம் லட்சுமி, எனது நண்பர் ஒருவர் விருந்துக்கு அழைத்துள்ளார். அதற்கு கட்டாயம் செல்ல வேண்டுமென கூறியுள்ளார். அப்படி வெளியில் செல்லும்போது எஸ்கேப் ஆகலாம் என எண்ணியிருந்ததாக தெரிகிறது. ஆனால் சிவச்சந்திரன், விருந்துக்கு அழைத்து செல்வது போல் லட்சுமியை காரில் அழைத்து கொண்டு நேராக சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு நடந்த விபரங்களை தெரிவித்த போது லட்சுமி வசமாக மாட்டிக் கொண்டார்.

சிவச்சந்திரன் காவல்நிலையத்தில் லட்சுமியை சிக்க வைத்ததை அறிந்த முன்னாள் கணவர்கள் சீர்காழி காவல் நிலையம் வந்தனர். இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கரூரைச் சேர்ந்த ஒருவரையும் திருமணம் செய்ததாகவும், அவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் லட்சுமி பற்றி அவருக்கு தெரியவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து லட்சுமியை கைது செய்தனர். தொடர்ந்து சீர்காழி நீதிமன்றத்தில் லட்சுமி ஆஜர்படுத்தப்பட்டு திருவாரூர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இதுபோல் லட்சுமி வேறு யாரையாவது ஏமாற்றி திருமணம் செய்தாரா, எவ்வளவு பணம், நகைகளை பறித்தார் என விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மாடுகளை விற்று மாடல் டாய்லெட் கட்டி தந்த கணவர்
போலீசார் நடத்திய விசாரணையில், லட்சுமி தன்னை எம்பிபிஎஸ் டாக்டர் எனவும், தான் ரூ.50,000 சம்பளம் வாங்குவதாகவும் தெரிவித்ததால், அவரது ஆசை வார்த்தையை நம்பி அவர்கள் வலையில் விழுந்துள்ளனர். கரூரை சேர்ந்த ஒருவர் லட்சுமியை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் வேலை பார்ப்பதாகவும், அவர் மாதம்தோறும் குடும்ப செலவுக்காக ரூ.50,000 அனுப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பணத்தை, லட்சுமி தனது சம்பளம் என கூறி கணவர்களை ஏமாற்றி வந்துள்ளார். டாக்டர் என்பதால் லட்சுமிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். ஒரு கணவர், வீட்டில் மாடுகளை விற்று மாடல் டாய்லெட் கட்டி கொடுத்துள்ளார். லட்சுமியை திருமணம் செய்து கொண்ட 3 பேரிடமும் லட்சுமி தனது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பர். அதனால் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி நடித்துள்ளார். லட்சுமி திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு தன்னை கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து வருவது போல் பாவனை காட்டியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...