தென்காசியில் கடந்த ஆண்டு சுகாதாரத்துறை அமைச்சரால் துவக்கி வைக்கப்பட்ட ஹெல்த் வாக் என்னும் ‘நடைப்பயிற்சி பாதை’ மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களின் அலட்சிய போக்கால் ஆபத்தான பாதையாக மாறி வருகிறது. இதனால் நடைபயிற்சி மேற்க்கொள்வோர் கடும் வேதனை அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு மாவட்டத்துக்கு ஒரு நடைப்பயிற்சி பாதை என்ற அடிப்படையில், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ‘ஹெல்த் வாக்’ திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்ப்பைப் பெற்றது.
கரோனாவுக்குப் பின்னர் நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றில் மக்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். நகர்ப்புறங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளயிடம் கிடைக்காமல் மக்கள் திண்டாடும் நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை விழிப்புணர்வுத் திட்டமாக ‘ஹெல்த் வாக்’ திட்டத்தைச் செயல்படுத்தியது. இதில், மாவட்டந்தோறும் 8 கி.மீ. தொலைவுக்கு ஒரு நடைபாதை என்ற அடிப்படையில், 38 மாவட்டங்களில் நடைப்பயிற்சி பாதைகள் அமைக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் இத்திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தி அனைத்து மாவட்டங்களிலும் துவக்கி வைத்தார்.
நடைபயிற்சி பாதையில், குடிநீர், இருக்கை வசதிகளுடன், மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் மருத்துவ முகாம் என்று பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. கடந்த ஆண்டு தென்காசி மாவட்டம், மேலகரத்தில் இத்திட்டத்தை துவக்கி வைத்த தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திட்டத்தை துவக்கி வைத்த போது இப்பகுதியில் சிமென்ட் கற்கள் பதித்து, நடப்பதற்குரிய தனிப் பாதையாக அமைக்கப்படும். இருபுறமும் மரக்கன்றுகள் நடப்படும். இந்த நடைபாதை வழியில் வாகனப் போக்குவரத்து அதிகம் இல்லாமலும், குப்பையின்றியும் பராமரிக்கப்படும்.மேலும், எத்தனை கி.மீ. நடைப்பயிற்சி மேற்கொண்டோம் என்பதை அறியும் வகையில், ஒவ்வொரு கி.மீ. தூரத்தைக் குறிக்கும் பலகைகள் நிரந்தரமாக நிறுவப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.
மேலகரம் மின் நகர் பகுதியில் துவங்கி காசிமேஜர்புரம் வழியாக இலஞ்சி குமாரர் கோவில் வழியாக மீண்டும் மின்நகர் பகுதிக்கு வந்து சேரும் வகையில் நடைபயிற்சி பாதை உருவாக்கப்பட்டது. அந்த பகுதி உள்ளாட்சி நிர்வாகங்கள் நடைபாதையைப் பராமரிக்க ஏற்ப்பாடு செய்யப்பட்டது.
ஆனால் தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் இத்திட்டம் செயல் இழந்துள்ளது. கிட்டத்தட்ட இந்த நடைபாதை முழுவதும் இருளில் மூழ்கி உள்ளது. திட்டமிடப்பட்ட இந்த நடைபாதையில் புதிதாக மின்விளக்கு அமைக்காத நிலையில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மின்விளக்குகளும் எரியாமல் நடைபயிற்சி செய்வோரை தட்டு தடுமாற செய்கிறது. இதனால் அதிகாலை நடைபயிற்சி வருவோர் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
அத்துடன் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் கிரஷர்களில் இருந்து எம் சாண்ட் கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் இந்த பாதையை தேர்வு செய்து அதிகாலையிலேயே கடும் வேகத்துடன் செல்லுவதால் பெரும்பாலானோர் உயிரை கையில் பிடித்த வண்ணம் நடைபயிற்சி செய்கின்றனர். இதனால் முதியோர்களும் , பெண்களும் நடைபயிற்சியை கைவிடும் சூழல் நிலவி வருகிறது.
கேரளாவிற்கு கனிமவளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் ரோடு குண்டும் குழியுமாக மாறி காட்சியளிக்கிறது. இதில் வேதனைக்குரிய விஷயம் என்றால் நடைபயிற்சி செய்வோர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்ப்படுத்துகிறது. மேலும் இந்த பகுதியில் நிலவும் தெருநாய் தொல்லை நடைபயிற்சி செல்வோருக்கு கடும் சவாலாக விளங்குகிறது. இது குறித்து பல முறை பகுதி சமூக ஆர்வலர்கள், நடைபயிற்சி செய்வோம் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது.
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தின் செல்லப்பிள்ளையாக கருதப்பட்ட ஹெல்த் வாக் திட்டம் தென்காசி மாவட்டத்தில் எழுந்தே நிற்க முடியாத, வளர்ச்சி பெறாத சவலை பிள்ளையாக மாறியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சரால் மிகவும் உற்ச்சாகத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட இத்திட்டம் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், அப்பகுதியில் சமூக ஆர்வலர்களும் நடைபயிற்சி செய்வோர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையானது மாவட்ட நிர்வாகத்தினரால் நிறைவேற்றப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment