நீலகிரி மாவட்டம், ஊட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஷாஜகான்(வயது 55), என்பவர், பொறுப்பு இணைச் சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை, அலுவலகத்தில் அன்றாடம் நடக்கும் பத்திரப்பதிவுகளின் பணிகளை முடித்து, தனது சொந்த ஊரான திருப்பூருக்கு வாடகை காரில் சென்றுள்ளார்.
அப்போது, ஊட்டி சேரிங்கிராஸ் அருகே, கோத்தகிரி சாலையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகவடிவு, தேர்தல் பிரிவுத் தாசில்தார் சீனிவாசன், காவல் உதவி ஆய்வாளர்கள் சக்தி, சாதன பிரியா மற்றும் ரங்கநாதன் ஆகியோர் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்தக் காரில், 3.98 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், ஊட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் (பொறுப்பு) இணைச் சார்பதிவாளர் ஷாஜகானை அவரது அலுவலகத்துக்கு மீண்டும் அழைத்து வந்து இரவு வரை விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் கூறுகையில், ''ஊட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் இணைச் சார் பதிவாளர் ஷாஜகான் என்பவர் திடீரென்று திருப்பூருக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தகவலின்படி, அவர் வாகனத்தை சோதனையிட்ட போது, கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. மற்ற விபரங்கள் பின்னர் தெரியவரும்.
No comments:
Post a Comment