சேலத்தில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கோடி கணக்கில் மோசடி செய்த விவகாரத்தில், திருமண மண்டபத்தில் போலீசார் நடத்திய சோதனையில் குவித்து வைத்திருந்த ரூ.12.65 கோடி பணம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி, அரிசி, மளிகை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
வேலூர் அடுத்த காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் விஜயபானு. இவர் புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளையை ஆரம்பித்து காட்பாடி, சித்தூர் பகுதிகளில் பலருக்கு லோன் வாங்கி தருகிறேன் எனவும், பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகவும் கூறி ஏமாற்றி வந்தார்.
இந்நிலையில் சேலம் அம்மாபேட்டை ஆத்தூர் மெயின்ரோட்டில் ஒரு திருமண மண்டபத்தை வாடகை எடுத்து ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால், மாதம்தோறும் ரூ.10 ஆயிரம் கிடைக்கும், பிறகு 7 மாதம் கழித்து ரூ.1 லட்சம் மீண்டும் கொடுக்கப்படும் என்று கூறி பொதுமக்களை ஏமாற்றி அப் பகுதியைச் சேர்ந்த பலரிடம் கடந்த 3 ஆண்டுகளாக ரூ.500 கோடி வரை வசூல் செய்து உள்ளார்.
சேலம் மண்டபத்தில் சிலருக்கு பணம் கொடுத்தல், வாங்கல் நிகழ்வு நடந்துகொண்டு இருப்பதாக சேலம் பொருளாதாரக் குற்றப்பிரிவுக் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் காவல் ஆய்வாளர் சித்ராதேவிவுடன் 10 பேர் அங்கு சென்றனர். அங்கு நடந்ததை அப்படியே வீடியோ பதிவு செய்தனர். அதை பார்த்ததும் அந்த ஏமாற்று கும்பல் காவலர்களை கொடூரமாக தாக்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர காவல்துறையினர் 200-க்கும் மேற்பட்டோர் விரைந்து சென்று காட்பாடியைச் சேர்ந்த அறக்கட்டளை தலைவர் விஜயபானு(48) மற்றும் சேலம் பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரதா (47), பாஸ்கர் (49) ,மத மேரி (37), மைக்கேல் (34) ஆகியோரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
சுமார் 2 கோடி ரூபாய் ரொக்கத்தையும் காவல்துறையினர் கைப்பற்றி அரசு வசம் ஒப்படைத்தனர்.
இதே பிரச்னைக்காக விஜயபானு, ஆந்திர மாநிலம் சித்தூரில் கைது செய்யப்பட்டு பின்பு ஜாமினில் வெளியில் வந்து தொடர்ந்து இதுபோன்று குழுவுடன் சேர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறார்.
அரசு அங்கீகாரம் இல்லாமல் பொதுமக்களிடம் முதலீடு தொகை பெற்று, இரட்டிப்பு லாபம் என விளம்பரம் செய்தது, எந்தவித முதலீடு யுக்தியும் இல்லாமல் பணம் வசூலித்தது, உள்பட்ட குற்றங்களுக்காக, சம்மந்தப்பட்ட நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்ட 12 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமண மண்டபத்தில் குவித்து வைத்திருந்த ரூ.12.65 கோடி, 2.5 கிலோ தங்கம், 1000 அரிசி கிலோ மூட்டைகள் ஆகியவையும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருவாய்துறை, காவல்துறையினர் மேற்பார்வையில் 7 மணிநேரம் 6 பணம் எண்ணும் மிஷினில் பணம் எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்காக ஐந்தாவது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து அவர் வேலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் டி .எம். கதிர்ஆனந்தை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து தன்னை திமுகவில் இணைத்து கொண்டதாக அறிவித்து அந்த புகைப்படத்தை டிஜிட்டல் பேனர் ஆக்கி வேலூர், காட்பாடி நகர் முழுவதும் வைத்து தான் திமுகவில் இணைந்து கொண்டதற்கான விளம்பரத்தையும் இவர் சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாதிரியார்களையும் அழைத்து அவர்களை மிரட்டி அவர்களிடம் தலா ரூபாய் 2 லட்சம் வசூல் செய்து சுருட்டி கொண்டார் என்ற தகவலும் உலா வருவது குறிப்பிடத்தக்கது. இவர் சில ரவுடிகளை தனக்கு துணைக்கு வைத்துக்கொண்டு செயல்படுவதாகவும் ஒரு ரகசிய தகவல் உலா வந்து கொண்டுள்ளது. ஆக மொத்தத்தில் தற்போது திமுக பிரமுகராக இருந்த போதும் சட்டம் தன் கடமையை செய்யும் என்பதற்கு உதாரணமாக சேலம் போலீசார் இந்த திமுக பிரமுகரான விஜய பானு உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் என மொத்தம் 12 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த தகவல் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment