தூத்துக்குடி அருகேயுள்ள கீழ தட்டபாறையைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 70). விவசாயியான இவர் கடந்த 1996ஆம் ஆண்டு மடத்துபட்டி பகுதியில் 2.60 ஏக்கர் நிலம் வாங்கினார். அந்த நிலத்திற்கு தற்போது புதுக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் வழிகாட்டி மதிப்பு போட்டு பார்த்தபோது பூஜ்ஜியம் என வந்துள்ளது. இதையடுத்து வழிகாட்டு மதிப்பீட்டு குறித்து மறு ஆய்வு செய்ய கோரி தாசில்தாரிடம் மனு அளித்தார்.
தாசில்தார் அந்த மனுவை வடக்கு சிலுக்கன்பட்டி கிராம நிர்வாக அதிகாரியான எட்டுராஜ் (வயது 53) என்பவருக்கு பரிந்துரை செய்தார். வரி மதிப்புக்கு விஏஓ, சுதாகரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து சுதாகர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் பீட்டர் பால் அறிவுறுத்தலின் பேரில் வடக்கு சிலுக்கன்பட்டி கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் வைத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வி.ஏ.ஓ., எட்டுராஜிடம் சுதாகர் வழங்கியுள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் அனிதா மற்றும் போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment