தேனியைச் சேர்ந்த கலையரசனும் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பிரகாவும் நாட்டுப்புறக் கலைஞர்கள். சோஷியல் மீடியா மூலம் பிரகாவுக்கு அறிமுகமான கலையரசன், அப்படியே அவரைக் காதலித்து 2019-ல் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்குப் பிறகு இருவரும் கூட்டாக ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கி அதில் நாட்டுப்புற கலைகள் தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில், திடீரென ஒருநாள் செயற்கையாக ஜடை எல்லாம் பின்னிக் கொண்டு உடல் மொழியை மாற்றிக் கொண்ட கலையரசன், தன்னைத்தானே அகோரி என பிரகடனம் செய்து கொண்டார். அந்த அவதாரத்தை
நம்பவைப்பதற்காக அவ்வப்போது காசி உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வர ஆரம்பித்தார்.
அகோரி ஆனதும்(!), “7 வயதில் எனக்கு 3-வது கண் திறந்தது. சிவனையும், காளியையும் நேரில் பார்த்தேன். பங்காரு அடிகளார், விஜயகாந்த் மரணம் எல்லாம் எனக்கு முன்பே தெரியும். ஒருவரை பார்த்த மாத்திரத்தில் அவரது பிறப்பு முதல் இறப்பு வரை சொல்லிவிடுவேன். தண்ணீரில் நடப்பேன், காற்றில் பறப்பேன்” என்றெல்லாம் கதைகளை எடுத்துவிட்டு சோஷியல் மீடியாவில் புது ரூட்டில் ட்ரெண்ட்டானார் கலையரசன்.
அந்த பிரபல்யத்தைப் பயன்படுத்திக் கொண்டு, திருமுல்லைவாயிலில் ஒரு கோயிலை எழுப்பி அங்கே உட்கார்ந்து அருள்வாக்கும் ‘அளக்க’ ஆரம்பித்தார். இதையும் அவரது மனைவி சோஷியல் மீடியாவில் வைரலாக்கினார். அருள்வாக்கு கேட்க வந்தவர்கள் அள்ளிக் கொடுத்ததால் வளம் கொழித்தார் கலையரசன். இதனிடையே, “மனைவி, மக்களுடன் இல்லறத்தில் இருக்கும் இவர் எப்படி அகோரியாக முடியும்?” என சிலர் விமர்சனங்களை வீசினார்கள். அதையும் இந்தத் தம்பதி அழகாக சமாளித்தது.
இந்நிலையில், எதிர்பாராத ட்விஸ்ட்டாக தம்பதிக்குள்ளேயே தகராறு முட்டிக் கொண்டு தனியாக பிரிந்தனர். “நான் ஆன்மிக வழியில் வாழ விரும்பினேன். ஆனால், எனது மனைவி ஆடம்பரமாக வாழ்வதற்காக சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கச் சொன்னார். முடியாது என்று சொன்னதற்கு அவரது குடும்பத்தினர் என்னை அடித்து துன்புறுத்திக் கொடுமைப்படுத்தினார்கள். எனவே எனது உயிருக்கு பாதுகாப்பு கொடுங்க பாஸ்” என்று கலையரசன் ஓட்டேரி காவல் நிலையத்தில் போலீசாரிடம் முறையிட்டார்.
பதிலுக்கு அவரது ஆதர்ச மனைவி பிரகாவும், “கலையரசன் கோயிலுக்கு பூஜைக்கு வரும் பெண்களுடன் தவறான உறவில் இருந்தார். சாமியார் என ஊரை ஏமாற்றுகிறார். அகோரி என போலி வேஷம் போட்டுக்கொண்டு ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார். அவரால் நிறைய பெண்களின் வாழ்க்கை சீரழிகிறது” என எதிர்பார்க்காத ஏவுகணைகளை எடுத்து வீசினார்.
இருதரப்புமே புகார்களை எடுத்து நீட்டினாலும் இருவருமே பிரிந்து வாழ முடிவெடுத்துவிட்டதால் இதில் எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என போலீஸ் ஒதுங்கிக் கொண்டு விட்டது. ஆனால், மாந்திரீக மோசடி, கோயிலுக்கு வந்த பெண்களிடம் கூடா உறவில் இருந்தது, தவறான வழியில் பணம் சம்பாதித்தது என இவர்கள் இருவரும் மாறி ஒப்புதல் வாக்குமூலம் தந்திருப்பதை போலீஸார் எப்படி சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள் என கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள். எனவே இனியாவது தாமதிக்காமல் மோசடி நபர்களான கணவன், மனைவி இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாகும்.
No comments:
Post a Comment