Wednesday, 27 November 2024

ஊட்டியில் பல லட்சம் லஞ்சப் பணத்துடன் லஞ்ச ஒழிப்பு போலீசிடம் சிக்கிய ஜஹாங்கீர் பாஷா.. திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையாளர் நியமனம்!

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் சிக்கிய நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா, திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையராக இரண்டு வாரத்தில் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக எதிரக்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சியில் ஆணையாளராக பணியாற்றி வந்த காலத்திலும் இவர் மீது புகார்கள் இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சி ஆணையாளராக கடந்த ஆகஸ்டு மாதம் ஜஹாங்கீர் பாஷா என்பவர் பொறுப்பேற்றார். இவர் கடந்த 33 மாதங்களாக அனுமதி இல்லாத மற்றும் விதிமீறிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கியதாக புகார்கள் எழுந்தது. மேலும் வாகனங்களை நிறுத்த தனியாருக்கு அனுமதி வழங்குவது உள்பட பல்வேறு செயல்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு அனுமதி வழங்கி வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்தநிலையில் கடந்த நவம்பர் 9-ந் தேதியன்று பணியை முடித்துக் கொண்டு வாடகை காரில் சொந்த ஊரான சென்னைக்கு ஜஹாங்கீர் பாஷா சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில் சில இடங்களில் பணம் வாங்கிக் கொண்டு சென்றதாக சிலர் குற்றம்சாட்டினார்கள். இது தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்தன் பேரில், நீலகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் ஊட்டி-கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா சென்ற காரை நிறுத்தி அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது காரில் கணக்கில் வராத ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் இருந்தது. இதுதொடர்பாக அவரிடம் 10 மணி நேரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் அவரால் கணக்கில் காட்ட முடியவில்லை என்று சொல்லப்பட்டது.

இதனால் லஞ்ச பணம் என்பதை உறுதி செய்த நீலகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், ஜஹாங்கீர் பாஷா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுபற்றி நகராட்சி துறைக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் ஊட்டி நகராட்சி ஆணையாளர் பொறுப்பில் இருந்து ஜஹாங்கீர் பாஷாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு கடந்த இரண்டு வாரம் முன்பு உத்தரவிட்டார்.

பொதுவாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கும் அரசு ஊழியர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். அத்துடன் கைதும் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். ஆனால் ஜஹாங்கீர் பாஷா விஷயத்தில் இரண்டுமே நடக்கவில்லை.. அதேநேரம் குற்றச்சாட்டு மற்றும் வழக்குப்பதிவு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இப்போது ஜஹாங்கீர் பாஷா திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை கடுமையாக விமர்சித்து பாஜக-வினரும், அதிமுகவினரும் ட்விட்டரில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். முன்னதாக இதே ஜஹாங்கீர் பாஷா மீது தான் திருவேற்காடு நகராட்சி ஆணையாளராக இருந்த போதும் புகார்கள் எழுந்தது என்று குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள், அப்போது அவரை தேனி அல்லிநகரத்திற்கு இடமாற்றியதாகவும் குற்றம்சாட்டினார்கள். இதுபற்றி தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்தால் தான் உண்மை நிலை தெரியவரும். அதேநேரம் ஜஹாங்கீர் பாஷா மீது போடப்பட்ட எப்ஐஆரை பதிவிட்டு பத்திரிகையாளர்கள் சிலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.



No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...