Sunday, 24 November 2024

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் இடமானது பேரூராட்சிக்கு தாரைவார்க்கப்பட்டதா? ..தமிழ்நாடு அரசு விளக்கம்!

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான திரிவேணி சங்கமத்திலுள்ள 46.5 சென்ட் இடத்தை கன்னியாகுமரி பேரூராட்சிக்கு அறநிலையத்துறை அராஜகமாக தாரைவார்த்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டின் தென்கோடி முனையிலுள்ள கன்னியாகுமரி மிக முக்கியமான சுற்றுலா தலமாக உள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கன்னியாகுமரிக்கு வருகை தருகின்றனர். கன்னியாகுமரியிலுள்ள பகவதி அம்மன் கோவிலும் மிகப் பிரசித்தி பெற்றது.

இந்நிலையில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான இடம், பேரூராட்சிக்கு தாரைவார்க்கப்பட்டதாக ஒரு பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பாஜகவின் மாநில ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு தலைவரான நாச்சியப்பன், சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து, பலரும் அதனை பகிர்ந்தனர்.

அந்தப் பதிவில், “கன்னியாகுமரி ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான திரிவேணி சங்கமத்திலுள்ள 46.5 சென்ட் இடத்தை கன்னியாகுமரி பேரூராட்சிக்கு அறநிலயத்துறை அராஜகமாக தாரை வார்த்தது நியாயமா? இந்த இடத்தில்தான் தொன்றுதொட்டு ஆடி அமாவாசையன்று லட்சக்கணக்கான மக்கள் தர்ப்பணம் கொடுப்பார்கள். இனி அவர்கள் தர்ப்பணம் கொடுக்க எங்கே செல்வார்கள்?

கோவில் நிலத்தை சுய லாபத்திற்காக அரசு புறம்போக்கு கோவில் என்று திரித்து வகைப்படுத்தியது யார்? கோவில் இடத்தை அரசியல் லாபத்திற்காக உபயோகப்படுத்த துணை போவதற்கான அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கும் மற்றும் இந்து சமய அறநிலையத் துறைக்கும் எங்கிருந்து வந்தது?

மேலும் இதுபோல் பல முன்னுதாரணங்கள் இருப்பதால், கோவில் நிலங்களை பக்தர்கள் உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற உத்தரவாதத்தை இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும். கோவில் நிலங்களை பாதுகாக்க தவறிய அறநிலையத்துறையையும் கண்டிக்கிறோம். இந்த அராஜகத்திற்கு அறநிலையத்துறை எதற்கு?” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தகவல் பொய்யானது என உண்மை சரிபார்ப்பகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான திரிவேணி சங்கமத்திலுள்ள 46.5 சென்ட் இடத்தை கன்னியாகுமரி பேரூராட்சிக்கு அறநிலையத்துறை அராஜகமாகத் தாரை வார்த்தது நியாயமா?" என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம், இது முற்றிலும் பொய்யான தகவல் எனத் தெரிவித்துள்ளது. பகவதி அம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடம் 'அ' பதிவேட்டு நகலின்படி கோவில் வகைப்பாட்டின் கீழ் கோயில் நிர்வாகத்திடம் உள்ளது. இந்த நிலத்தில் கழிவறை மற்றும் குளியலறை பகுதியைத் தூய்மையாகப் பராமரிக்கவும், கிழக்கு பகுதியில் கடற்கரையை ஒட்டிக் காலியாக உள்ள இடத்தில் மக்கள் பயன்பாட்டிற்காகத் தற்காலிக நிழற்குடை மற்றும் இருக்கைகள் அமைத்துப் பராமரிக்கவும் பேரூராட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இங்கு நிரந்தர கட்டுமானங்களைக் கட்டக் கூடாது. வேறு வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது. நிலத்திற்கான உரிமையினை பேரூராட்சி நிர்வாகம் கோர முடியாது உள்ளிட்ட நிபந்தனைகளுடனே செயல்முறை ஆணை வெளியிடப்பட்டுள்ளது. வதந்திகளைப் பரப்பாதீர்! என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...