தேன்கனிக்கோட்டை பள்ளப்பள்ளியில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி மற்றும் உதவியாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பள்ளப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரப்பா மகன் முருகேசன் (35 வயது). இவர் வாரிசு சான்றிதழ் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார்.
அப்போது முருகேசனிடம், பள்ளப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் தம்பிதுரை (42 வயது), விண்ணப்பத்தைப் பரிந்துரை செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகேசன், கிருஷ்ணகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகாரளித்தார்.
அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி கிருஷ்ணராஜன் தலைமையில், காவல் ஆய்வாளர் பிரபு, உதவி ஆய்வாளர் மஞ்சுநாத் மற்றும் போலீசார் ஸ்ரீதர், ரவி ஆகியோர் புகாரரான முருகேசனிடம் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் கொடுத்து கிராம நிர்வாக அதிகாரியிடம் கொடுக்கும்படி அனுப்பியுள்ளனர்.
இதை பெற்றுக்கொண்ட முருகேசன், விஏஓ தம்பிதுரையிடம் பணம் கொடுத்தபோது உதவியாளரிடம் கொடுக்க கூறியுள்ளார். இதையடுத்து பெண் உதவியாளர் புஷ்பா (40 வயது) என்பவரிடம் பணம் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு பின்னர் கிருஷ்ணகிரிக்கு அழைத்துச் சென்றனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
வாரிசு சான்றிதழ் கொடுக்க லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்த சம்பவம் பள்ளப்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment