Wednesday, 27 November 2024

திருப்பத்தூரில் அரசுப் பள்ளிக்கூடத்தில் மாணவருக்கு நேர்ந்த ஜாதி தீண்டாமை ஆசிரியர் சஸ்பெண்ட்

அரசு பள்ளியில் மாணவரின் பாட புத்தகத்தில் சாதி பெயரை எழுதியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

தீண்டாமை என்பது ஒரு பாவச்செயல், அது ஒரு பெருங்குற்றம், மனித தன்மையற்ற செயலும் கூட' என்பதை குழந்தைகள் பள்ளிகளிலிருந்து தான் கற்கின்றனர். இந்த போதனைகள் மாணவர்களுக்கானது மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கானதும்தான். ஆனால், சாதிய பாகுபாடுகளற்ற சமூகத்தை வளர்த்தெடுக்க வேண்டிய ஆசிரியர்களே, சில நேரங்களில் சாதியத்தை உயர்த்தி பிடிப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தாங்கி பிடிப்பது சாதியத்தை மட்டுமல்ல, எதிர்கால சீரழிவையும்தான். வேலூரை அடுத்த திருப்பத்தூர் மாவட்டத்திலும் இப்படியான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம், குனிச்சி மோட்ரூர் எனும் பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக விஜயகுமார் பணியாற்றி வருகிறார். ஆனால் இவர் மீது கடந்த சில நாட்களாகவே குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. சாதிய ரீதியாக மாணவர்களை அணுகுகிறார் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவர் மாணவரின் பாட புத்தகத்தில் சாதியின் பெயரை எழுதியுள்ளார். இது மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.


இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்பதற்காக மாணவர்களுடன் பெற்றோர்கள் சேர்ந்து கடந்த 19ம் தேதி பள்ளியின் தலைமை ஆசிரியரை முற்றுகையிட்டுள்ளனர். ஆனால் அவர் சரியான விளக்கம் அளிக்காமல் மழுப்பி, பெற்றோரை சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கிறார். இதனையடுத்து, இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள், பெற்றோருடன் சேர்ந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

போராட்டத்தையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் விஜயகுமாரை பணியிடை நீக்கம் செய்வதாக மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். நடவடிக்கையையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து பெற்றோர்கள் கூறுகையில், "ஆசிரியர் விஜயகுமார் கடந்த சில நாட்களாகவே மாணவர்களை சாதிய கண்ணோட்டத்துடன் அணுகுவதாக எங்களுக்கு சந்தேகம் இருந்தது. சில நாட்களுக்கு முன்னர் இசைக்கருவிகள் குறித்த பாடத்தை அவர் நடத்தியுள்ளார். அதில், குறிப்பிட்ட இசைக்கருவிகளை பட்டியலின மக்கள்தான் இசைக்கின்றனர் என்று கூறி, சாதியின் பெயரை சொல்லி அதை இழிவுப்படுத்தியும் பேசியிருக்கிறார். இதனை தொடர்ந்துதான் அவர் மாணவர்களின் நோட்டு புத்தகத்தில் சாதி பெயரை எழுதியுள்ளார். ஆகவே அவர் மீது நடவடிக்கை கோரியிருந்தோம்" என்று கூறியுள்ளனர்.

சாதிய அடையாளங்களை ஒழிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஆசிரியர்களே, சாதிய ஏற்றத்தாழ்வுகளை உயர்த்திப் பிடிப்பது கவலையளிப்பதாக கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...