Sunday, 24 November 2024

10 வருசமா தோல்வியை சந்தித்த திமுக இன்று ஆட்சியில் இல்லையா? காலச் சூழலுக்கு ஏற்றவாறு ஆட்சி மாறும்!.. நாளை நாம் ஜெயிப்போம்.. எடப்பாடி பேச்சு!

தமிழ்நாட்டின் முதல் பெண் முதல்-அமைச்சரும், எம்.ஜி.ஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து வெற்றியையோ, தொடர்ந்து தோல்வியையோ சந்திப்பதில்லை. வெற்றியும் தோல்வியும் மாறி மாறித்தான் வரும். ஏன், திமுக பத்தாண்டுகள் தொடர் தோல்வியை சந்திக்கவில்லையா? அப்படி 10 ஆண்டுகள் தோல்வியை சந்தித்த திமுக இன்று ஆட்சியில் இல்லையா?" எனப் பேசியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, விழா சிறப்பு மலரை வெளியிட்டார். அதனை எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜயன் பெற்றுக் கொண்டார்.

அதனைத்தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேசுகையில், “இந்த விழா அதிமுகவின் குடும்ப விழா. எம்ஜிஆருக்கும் நான் முதலமைச்சராக இருந்தபோதே நூற்றாண்டு விழா கொண்டாடினேன். நான் முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதுவரை எந்த கட்சித் தலைவருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் நூற்றாண்டு விழா எடுக்கப்பட்டது இல்லை.

ஒரு கட்சித் தலைவருக்கு தமிழ்நாடு முழுவதும் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது என்றால் அது அதிமுகவில் மட்டும்தான். நான் அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் இந்த நேரத்தில், ஜானகி அம்மாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. எம்ஜிஆர், ஜானகி உள்ளிட்டோரின் நூற்றாண்டு விழாக்களை எடுக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது பெருமையாக உள்ளது.

17 வயதிலேயே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தவர் ஜானகி அம்மா. எம்ஜிஆருக்கும் ஜானகி அம்மாவுக்கும் காதல் மலர்ந்து கல்யாணம் நடந்தது. பின்னர் திருமணத்துக்கு பிறகு எம்ஜிஆருக்கு சேவை செய்ய தன்னையே அர்ப்பணித்தவர் ஜானகி அம்மா. சோதனையான காலகட்டத்தில் எம்ஜிஆருக்கு பக்க பலமாக இருந்தவர் ஜானகி அம்மாள். எம்.ஜி.ஆர்‌‌ சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது ஜானகி அம்மாள் உடனிருந்து பணிவிடை செய்து பூரண குணம் அடைந்து மக்கள் சேவையாற்றச் செய்தவர் ஜானகி அம்மாள்.

எம்ஜிஆர் உடல் நலம் பாதிக்கப்பட்ட போது அமெரிக்காவுக்கு சிகிச்சை பெறச் சென்றபோது பல்வேறு விதமான கருத்துக்கள் பேசப்பட்டது. அதையெல்லாம் முறியடித்து, அமெரிக்காவில் அற்புதமான சிகிச்சை எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்டது. பின்னர் அவர் பூரண குணமாகி மீண்டும் முழுமையான எம்.ஜி.ஆராக அவரை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தது ஜானகி அம்மையார்‌தான். எம்ஜிஆரை மீண்டும் நல் ஆரோக்கியத்துடன் கொண்டு வந்த பெருமை ஜானகி அம்மையாரையே சேரும்.

அதிமுக உருவாக்கப்பட்டபோது கருணாநிதியால் பல்வேறு இடையூறு ஏற்பட்டது. எம்ஜிஆர் சட்டப்பேரவையில் பேசிக்கொண்டிருந்த போது மைக் அணைக்கப்பட்டது. அப்போது செருப்பு, புத்தகம் வீசப்பட்டது. இருந்தாலும் எம்ஜிஆர் பேசிக் கொண்டே இருந்தார். பேசி முடிக்கும்போது எம்ஜிஆர், 'நீங்கள் எவ்வளவு அவமானப்படுத்தினாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். மீண்டும் சட்டப்பேரவையில் நுழையும்பொழுது தமிழ்நாடு மக்களின் ஆதரவோடு முதலமைச்சராக வருவேன்’ என சபதம் எடுத்தார். பின்னர் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று முதலமைச்சராக சட்டப்பேரவையில் நுழைந்தார் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கழகம் இரண்டாக பிளவு பட்டது. அந்த பிளவுபட்ட கழகத்தை ஒன்றாக இணைத்தவர் ஜானகி அம்மையார். எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழ்நாட்டில் மலர வேண்டும் என நினைத்தார் ஜானகி அம்மையார். ஜானகி அம்மா, ஜெயலலிதா அவர்களை அழைத்து 'கழகத்தை நீங்கள் வழிநடத்த வேண்டும்’ என ஒப்படைத்தார். இதையடுத்து கழகம் ஒன்றாக இணைந்தது.

எம்ஜிஆர் போன்று அதிக சோதனைகளை கண்டவர் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா. அதிமுக எப்போதெல்லாம் பிரச்சனைகளை சந்திக்குமோ அப்போதெல்லாம் வெற்றி கிடைக்கும். அதேபோலத்தான் இன்று நமது இயக்கத்தை அழிக்க நினைத்தாலும் அது நடக்காது. ஒருபோதும் அவர்களது எண்ணம் நிறைவேறாது‌. எம்ஜிஆர் உடனே முதலமைச்சராக வரவில்லை. சட்டப்பேரவை உறுப்பினராக தேர்தல் பரப்புரை செய்து அதன் பிறகுதான் ஆட்சி பிடித்தார் எம்.ஜி‌.ஆர்.

எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து வெற்றியையோ, தொடர்ந்து தோல்வியையோ சந்திப்பதில்லை. வெற்றியும் தோல்வியும் மாறி மாறித்தான் வரும். ஏன், திமுக பத்தாண்டுகள் தொடர் தோல்வியை சந்திக்கவில்லையா? அப்படி பத்து ஆண்டுகள் தோல்வியை சந்தித்த திமுக இன்று ஆட்சியில் இல்லையா? காலச் சூழலுக்கு ஏற்றவாறு ஆட்சி மாறும். அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் போன்று வேறு எந்த கட்சிக்கும் தொண்டர்கள் கிடையாது. இன்றும் நாம் குடும்பம் போல் உள்ளோம். அதுதான் நாம்.

அதிமுக என்பது குடும்பம். திமுக என்பது கருணாநிதியின் குடும்ப கட்சி. கருணாநிதி குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் அந்தக் கட்சிக்கு தலைவராக மாற முடியும். ஆட்சி அதிகாரத்துக்கு வர முடியும். ஆனால் அதிமுகவுக்கு அப்படி இல்லை. உழைக்கும் நபர்கள் யார் வேண்டுமானாலும் கட்சிக்கு பொதுச் செயலாளராக வரலாம்‌. அதிமுகவில் ஒரு தொண்டர் கூட முதலமைச்சராக மாறலாம். திமுக மற்றும் அதிமுகவுக்கு இடையே உள்ள வேறுபாடு இதுதான்.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...