Friday, 22 November 2024

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை.. கைதாகிறாரா?.. ஓய்வு ஐஜி முருகன்? பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தமிழ்நாடு காவல்துறையில் ஈரோடு அதிரடிப்படை ஐஜியாக பணியாற்றி 
ஓய்வு பெற்ற முருகனுக்கு பிடிவாரண்ட் என்பது பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகாத நிலையில் சென்னை சைதாப்பேட்டை மாநகர நீதிமன்றம் முருகனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் ஓய்வு பெற்ற ஐஜி முருகன் கைதாகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாடு காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் முருகன். இவர் ஐஜியாக இருந்து பணி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 2017 - 18 ம் ஆண்டில் சென்னை ஆலந்தூரிலுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுத் துறையில் பணியாற்றினார்.

அப்போது அவர் லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குநராக செயல்பட்டு வந்தார். இந்த சமயத்தில் அவருக்கு கீழ் பணிபுரிந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதாவது முருகன், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு ஆபாசமாக மெசேஜ் செய்து தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. 

இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி 2018 ஆம் ஆண்டில்
ஆகஸ்ட் 3ம் தேதியன்று சென்னையிலுள்ள தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், சம்பந்தப்பட்ட அந்த ஐ.ஜி. முருகன் தன்னிடம் எவ்வாறு எல்லாம் தவறாக நடந்து கொள்ள முயன்றார் என்பதை விரிவாக தெரிவித்துள்ளார். பல முறை மறைமுகமாக சமிக்ஞைகள் செய்ததாகவும், பின்னர் வெளிப்படையாக தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார் என்றும் அந்தப் புகாரில் பெண் ஐபிஎஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாட்டில் அரசு துறையில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் அத்துமீறல்களை விசாரிப்பதற்காக புதியதாக உருவாக்கப்பட்ட விஷாகா கமிட்டி இந்தப் புகாரை விசாரிக்கும் என்று அப்போதைய டிஜிபி உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. அதன் பேரில் பெண் போலீஸ் அதிகாரி கொடுத்துள்ள புகாரை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என்றும், விரைவில் இந்த விசாரணை தொடங்கும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், விஷாகா கமிட்டியை டிஜிபி ராஜேந்திரன் புதுப்பித்தார். அந்த கமிட்டியில், கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், சு.அருணாச்சலம், டிஐஜி தேன்மொழி ஆகியோரைக்கொண்ட குழுவை அமைத்து அப்போதைய டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சரஸ்வதி, டிஜிபி அலுவல அதிகாரி ரமேஷ் உள்ளிட்டோர் அந்த கமிட்டியில் உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ள செய்திகள் வெளியாக்கிய நிலையில், காவல்துறையிலேயே உயர் பதவியில் இருக்கும் ஐஏஎஸ் பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தொந்தரவு அளிக்கப்பட்டது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் எஸ்பி அதிகாரி வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிபிசிஐடி வழக்கு விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் முருகன் மீது பெண்கள் வன்கொடுமை, பாலியல் தொல்லை உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது. ஆனால் வழக்கு விசாரணை என்பது தொடர்ந்து முன்னேற்றம் அடையாமல் இருந்தது. இதனால் முருகனை காப்பாற்றும் முயற்சி நடப்பதாக பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி குற்றம்சாட்டினார்.

இதையடுத்து முருகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தற்போதைய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியிடம் அனுமதி கோரி கடிதம் எழுதப்பட்டது. ஆளுநர் ஆர்.என். ரவியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒப்புதல் வழங்கினார். அதன்பிறகு சிபிசிஐடி சார்பில் முருகன் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முருகன் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் முருகன் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில் தான் ஓய்வு பெற்ற ஐஜியான முருகனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் முருகன் கைதாகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...