பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் திரும்புகிறார். லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 'சர்வதேச அரசியல்' என்ற தலைப்பிலான படிப்பை மேற்கொள்ளச் சென்ற அண்ணாமலை, 3 மாத படிப்பை முடித்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு திரும்பினார்.
தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாத காலம் சர்வதேச அரசியல் புத்தாக்கப் படிப்பை மேற்கொள்ள கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதியன்று வெளிநாடான லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்கு முந்தைய நாள் இரவு, முதலீடுகளை ஈர்க்கும் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற நிலையில் அண்ணாமலை அடுத்த நாள் லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
மேற்படிப்பு மேற்கொள்வதோடு லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அண்ணாமலை கலந்து கொண்டு வந்தார். மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தி வந்தார். அவ்வப்போது, தமிழக அரசியல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வந்தார். இந்நிலையில், 3 மாத படிப்பு முடிந்து தமது தாயகமான தமிழ்நாட்டிற்கு திரும்புகிறார்.
தமிழ்நாட்டுக்கு திரும்பிய அண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க தயாராகி வருகின்றனர். சென்னை திரும்பும் அண்ணாமலையை வரவேற்று, இரு தினங்களாக 'TN Welcomes Annamalai' என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றதால், இங்கு கட்சிப் பணிகளை ஒருங்கிணைத்து வழிநடத்த ஒருங்கிணைப்பு குழு ஒன்றை பாஜக தலைமை அமைத்தது. தமிழ்நாடு பாஜகவின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து வழிநடத்த தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தலைமையில், மாநில துணை தலைவர்கள் எம்.சக்கரவர்த்தி, பி.கனகசபாபதி, பொதுச் செயலாளர்கள் எம்.முருகானந்தம், பேராசிரியர் ராம சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.
சென்னை வரும் அண்ணாமலை, சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெறும் கட்சி நிகழ்வில் பங்கேற்பார் என்றும், அதன்பிறகு கோவையில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் அண்ணாமலை பங்கேற்க இருக்கிறார். மேலும், 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், மாநிலம் தழுவிய சுற்றுப் பயணத்தையும் அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கூறப்பருகிறது. கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக,'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் தமிழ்நாட்டின் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று நடைபயணம் மேற்கொண்டிருந்தார் அண்ணாமலை.
அதேபோல தற்போது 234 தொகுதிகளிலும், கிராமப் புறங்களை குறிவைத்து பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் உள்ள கிராமங்களுக்கும் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை தமிழ்நாட்டில் இல்லாத இந்த 3 மாதங்களில் பாஜக சீனிலேயே இல்லாத நிலை இருந்தது. பாஜக உறுப்பினர் சேர்க்கை பணிகள் மந்தமடைந்திருந்தன. சென்னை கனமழையின்போதும் பாஜக பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.
இந்தச் சூழலில் அண்ணாமலை திரும்பி வரும் நிலையில், தமிழக அரசியல் களத்தில் பாஜகவை மீண்டும் ஆக்டிவ் ஆக்குவார் என்று பாஜக தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். அண்ணாமலை விஜய்யை எவ்வாறு எதிர்கொள்வார், 2026 சட்டசபைத் தேர்தலையொட்டி அதிமுகவுடன் உறவை புதுப்பிப்பாரா என்ற பல கேள்விகள் அரசியல் களத்தில் நிலவுகின்றது.
No comments:
Post a Comment