Monday, 25 November 2024

கொணவட்டம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி நுழைவு வாயிலில் சுகாதாரச் சீர்கேடு!

வேலூர் மாநகராட்சி கொணவட்டம் தொடக்கப்பள்ளி நுழைவு வாயிலில் குப்பை அள்ளும் பொருட்களை வைத்து சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தியுள்ளனர். இதை அகற்ற வேண்டும் என்று பெற்றோர்கள் திடீர் போர்க் கொடியை தூக்கியுள்ளனர்.

வேலூர் மாவட்டம், கொணவட்டம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் சுமார் 2000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் நுழைவு வாயில் பகுதியில் அதாவது பள்ளியின் கேட் அருகே குப்பை அள்ளும் தளவாடப் பொருட்களை நிறுத்தி வைத்துள்ளனர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள். இதனால் இந்த பகுதியில்  சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. 

தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கொசுக்கள் அதிகளவில் இங்கே குடி புக ஆரம்பித்து விட்டன. இதே போன்று கொசுக்களை தொடர்ந்து ஈக்களும் மொய்க்க ஆரம்பித்துவிட்டன. இதனால் இங்கு பயிலும் சின்னஞ்சிறு சிறார்கள் டெங்கு ,மலேரியா, ஃபுளூ போன்ற காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் புகார் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர். அதனால் இந்த குப்பை அலள்ளும் தளவாடப் பொருட்களை அங்கிருந்து உடனடியாக போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர்கள் வேலூர் மாநகராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதை உடனடியாக செய்ய வேண்டும் எனவும் செய்ய தவறும் பட்சத்தில் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து பள்ளியில் முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாகவும் பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குள் முந்திக்கொண்டு வேலூர் மாநகராட்சி நிர்வாகம் இந்த குப்பை அள்ளும் தளவாடப் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்துமா? அல்லது அலட்சியப்படுத்துமா ?பெற்றோர்கள் முற்றுகையிட்டபின் அப்புறப்படுத்தி தருமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...