புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் வானவில் மன்றம் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டார செயலாளரும், அறிவியல் ஆசிரியர் ரகமத்துல்லா வானவில் மன்றம் குறித்து பேசும்பொழுது
அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் வானவில் மன்றத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காட்டூர் - பாப்பாக்குறிச்சி, அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2022 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
வானவில் மன்றம் என்பது அறிவியல், தொழில்நுட்பம் , பொறியியல், கணிதம் இணைந்த செயல் திட்டமாகும்.
தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட வானவில் மன்றத்தின் அடிப்படை முழக்கம் எங்கும் அறிவியல், யாவும் கணிதம் என்பதாகும்.
அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக, புதியவற்றை அறிந்து கொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் இம்மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளிடையே இயல்பாகவே உள்ள படைப்பாற்றல் ஆர்வத்தினை வளர்த்தெடுத்து அறிவியல் கற்றலுக்கு பயன்படுத்துதல், அறிவியல் கற்பதன் மூலமாக கிடைக்கும் ஆர்வத்தினை தக்க வைத்தல், இந்த ஆர்வத்தின் மூலம் புதுமைகளைக் காணும் மனப்பாங்கினை வளர்த்தெடுத்தல், தாம் பெற்ற அறிவினை தமக்கான மொழியில் பகிர்ந்து அறிவியல் மொழி பழகுதல், அறிவியல் மனப்பான்மையை பரவலாக்குதல், அன்றாட வாழ்க்கையிலுள்ள அறிவியலை உணர்தல், சமூகவியல் இலக்கியத்துடனான அறிவியலைப் புரிந்து கொள்ளுதல் ஆகியவை வானவில் மன்றத்தின் நோக்கங்கள் ஆகும்.
இத்திட்டத்திற்காக தமிழ்நாடு முழுவதும் ஸ்டெம் கருத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் நடமாடும் அறிவியல் மற்றும் கணித பரிசோதனை ஏதுவாளர்களாக செயல்படுவருகிறார்கள்.
மேலும், அவர்கள் 6 முதல் 8 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனைகளுக்கான கருவிகளை உடன் எடுத்து வருகிறார்கள். அரசுப் பள்ளிகள் தோறும் வரும் கருத்தாளர்கள் பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து, ஆசிரியர்கள் துணையோடு மாணவர்களுக்கு பரிசோதனைகளை செய்து காண்பிக்கிறார்கள் என்று பேசினார். வானவில் மன்றத்தின் மூலம், ஏன் எதற்கு, எப்படி என்ற வினாக்கள் மூலம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள பயனுள்ளதாக இருக்கிறது என்றும், வானவில் மன்ற திட்டத்தை எங்களுக்கு வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் , துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை குழந்தைகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள் நிவின் வெள்ளைச்சாமி, செல்விஜாய், சகாய ஹில்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வானவில் மன்றத்தின் சார்பில் வட்டார அளவில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தல் போட்டியில் அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவிகள் ஒன்றிய அளவில் முதலிடம் பெற்றனர்.
முன்னதாக வானவில் மன்ற கருத்தாளர் தெய்வீக செல்வி குழந்தைகளுக்கு சோதனை செய்து காண்பித்தார்.
No comments:
Post a Comment