Tuesday, 11 March 2025

தமிழ் தெரியாமல் அரசுப் பணியா? மொழி தெரியாமல் ஏன் பொதுப்பணிக்கு வருகிறீர்கள்!

தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களுக்கு தமிழ் தெரியாது என்றால், அவரால் எப்படி அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மாநில அரசின் அலுவலக மொழி தெரியவில்லை எனில், பொதுப் பணிக்கு ஏன் வருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம், தமிழ்நாடு அரசுப் பணிக்கு தமிழ் மொழி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம், கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு மின்வாரிய இளநிலை உதவியாளராக தமிழக அரசுப் பணியில் சேர்ந்துள்ளார். இவரின் தந்தை கப்பல் படையில் பணியாற்றியதால், அவர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்திருக்கிறார். இந்த நிலையில் தமிழ் மொழித் தேர்தல் ஜெயக்குமார் தேர்ச்சி பெறாததால், அரசுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து ஜெயக்குமார் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது மனுதாரர் தமிழர் என்பதால் பணி வழங்கலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து மின்சார வாரியத்துறை சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கு மீண்டும் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தரப்பில், சிபிஎஸ்இ கல்வித் திட்டத்தில் படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள். தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவர்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டும்?

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தமிழ் மொழியில் தேர்வு எழுதி வெற்றிபெறாத சூழலில் எப்படி பணி நீட்டிப்பு செய்ய முடியும்? தமிழ்நாட்டில் அரசுப் பணியில் சேர்ந்தால் தமிழ் மொழியில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டின் அலுவல் மொழியாக தமிழ் உள்ளதால், ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.

அரசு ஊழியருக்கு தமிழ் தெரியாது என்றால், அவரால் எப்படி அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியும்? மாநில அரசின் அலுவலக மொழி தெரியவில்லை என்றால், பொதுப் பணிக்கு ஏன் வருகிறீர்கள்? எந்த மாநிலத்தில் அரசுப் பணி புரிந்தாலும், அந்த மாநிலத்தின் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து தனி நீதிபதியின் உத்தவரை நிறுத்தி வைத்த நீதிபதிகள், குறிப்பிட்ட கால அளவிற்குள் மாநில அரசு சார்பில் நடத்தப்படும் மொழித் தேர்தல் வெற்றிபெற வேண்டும் என்றும் அறிவுறுத்தி, வழக்கின் விசாரணை ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment

விஜிலென்ஸ் போலீசாரின் வளையத்துக்குள் கலால் உதவி ஆணையர்: காரில் சிக்கியது ரூ.3.75 லட்சம் கைப்பற்றல்

விருதுநகரில் ரூ.3.75 லட்சத்துடன் காரில் சென்ற மாவட்ட கலால் துறை உதவி ஆணையர் கணேசனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்கின்றன...