Monday, 3 March 2025

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தின் ஆணைகளை அலட்சியபடுத்தும் நகராட்சி நிர்வாகம்.நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வரை சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்.

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தின் ஆணைகளை கண்டு கொள்ளாமல் அலட்சிய போக்குடன் சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரகம் செயல்படுவதால் உள்ளாட்சி முறைமன்ற நடுவத்தின் நோக்கமே கேள்வி குறியாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பிரதமர், மத்திய அமைச்சர்கள், மத்திய அரசு அலுவலர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்க லோக்பால் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. அதேபோல மாநிலங்களில், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்த வரிசையில், உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், துணை மேயர் முதல் பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர்கள் வரையிலான நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மீதான ஊழல் புகார்கள், முறைகேடு குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க 2014ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் அமைக்கப்பட்டது.
இந்த நடுவத்தின் நடுவராக முதலில்  ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சோ.அய்யர் நியமிக்கப்பட்டார். அவரது பதவி காலம் முடிந்த பின்பு ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மாலிக் பெரோஸ்கான் நடுவராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிகாலம் முடிந்த பின்பு தற்போது ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மகேஷ் காசிராஜன் நடுவராக செயல்பட்டு வருகிறார்.

கடந்த 2014ம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் செயல்பட துவங்கிய நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் நிர்வாகத்தில் வெளிப்படைதன்மையும், மக்களுக்கான சேவையில் மேம்பாடும் ஏற்ப்பட்டுள்ளது. ஆனால்
பல நேரங்களில் நடுவத்தின் ஆணைகளை சம்பந்தபட்ட துறைகள்  அமல் படுத்தாமல் அலட்சிய போக்குடன் நடந்து கொள்ளுகின்றனர். இதனால் இந்த நடுவத்தின் நோக்கமே கேள்வி குறியாகியுள்ளது. 
இது குறித்து தென்காசி மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கணபதி பாலசுப்பிரமணியன் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 13.07.2021 அன்று கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்குவதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து மாண்பமை தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்திற்கு புகார் தெரிவித்தேன். இது குறித்து விசாரணை மேற்க்கொண்ட நடுவர் அவர்கள் ஆணை எண்.56/ந/2021 நாள் 13.04.2022 ன் படி ஆணை பிறப்பித்தார்கள். அந்த ஆணையில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் தலைமையில் குழு ஒன்று அமைத்து  கடையநல்லூர் நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்புகள் விதிகளின் படி முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்க்கொள்ள நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு உத்தரவு பிறப்பித்தார்கள். 

ஆனால் இந்த ஆணையை நகராட்சி நிர்வாக ஆணையரகம் கண்டு கொள்ளாமல் கிடப்பில் போட்டது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதே போல தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ஒளிவு மறைவற்ற ஒப்பந்தபுள்ளி சட்டம் மற்றும் நகராட்சி நிர்வாகம் செயல்படுத்தி வரும் சட்டங்களை மதிக்காமல் கடையநல்லூர் நகராட்சியில் அதிகாரிகளும் ஒப்பந்த காரர்களும் சுமார் 10 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்தனர். இது குறித்து நான் கடந்த 11.01.2022 அன்று உள்ளாட்சிகளில் நடைபெறும் ஊழல், மற்றும் முறைகேடுகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உள்ளாட்சிகள் முறைமன்ற நடுவத்திற்கு அனைத்து ஆவணங்களையும் இணைத்து புகார் செய்தேன். இதனைத் தொடர்ந்து  புகாரை விசாரித்த தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்,ஒய்வு பெற்ற  ஐ.ஏ.எஸ் அதிகாரி  மாலிக் பெரோஸ்கான் உத்தரவு பிறப்பித்தார்கள். (ஆணை எண் .003/ந/2022, நாள் 21.02.2022). அந்த உத்தரவில் "மேற்க்கண்ட பணிகளை மேற்க்கொள்ள நகராட்சி நிர்வாக இயக்குனரிடமோ அல்லது, மண்டல இயக்குனரிடமோ எவ்வித முன் அனுமதியும் பெறாமல் நகராட்சி பொது நிதியின் கீழ் மிகப்பெரிய அளவில் டெண்டர் கோரி தனனிச்சையாக செயல் பட்டதை ஏற்க இயலாது. இச்செயலை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நிர்வாகத்தை சீரழிக்கும் செயலாகவே இம்முறைமன்ற நடுவம்  கருதுகிறது. எனவே விதி முறைகளுக்கு புறம்பாகவும், தன்னிச்சையாகவும் செயல்பட்ட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கையினை மேற்க்கொள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் அவர்களுக்கு பரிந்துரைத்து இம்முறை மன்ற நடுவம் ஆணையிடுகிறது என்று ஆணை பிறப்பித்தார். ஆனால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

இதே போல கடையநல்லூர் நகராட்சியில் ஒப்பந்த புள்ளி மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளுக்கு பதிலாக தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 15ஐ தவறாக பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் மோசடி நடந்தது. இது குறித்து நான் கடந்த 04.07.2022 அன்று தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்திற்கு புகார் செய்தேன். புகாரை விசாரித்த நடுவர் 27.12.2022 அன்று தீர்ப்பளித்தார். அதில் கடையநல்லூர் நகராட்சியில் ஒப்பந்தபுள்ளி மூலம் மேற்க்கொள்ள வேண்டிய பணிகளுக்கு பதிலாக தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 15ஐ தவறாக பயன்படுத்தி  சட்டத்திற்கு புறம்பாக விதிகளை மீறி பொறுப்பற்ற முறையில் தன்னிச்சையாக கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் செயல்பட்டுள்ளார் இவ்வாறு கடமை தவறியும், மெத்தனமாகவும் மற்றும் அலட்சியமாகவும் செயல்பட்ட கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் மீது உரிய விதிகளின் கீழ் துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்க்கொள்ளுமாறு நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு ஆணையிட்டார். ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் நடுவரின் உத்தரவு நடைமுறை படுத்தவில்லை. 
சட்டரீதியாக அமைக்கப்பட்ட தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தின் தீர்ப்புகள் சம்பந்தபட்ட துறையினரால் நடைமுறைப்படுத்த படாததால் இந்த அமைப்பின் நோக்கமே கேள்வி குறியாகியுள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகள் மீது புகார் தெரிவிக்கும் பொதுமக்கள் இந்த நடுவத்தின் மீது நம்பிக்கை இழக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே தாங்கள் இதில் தலையிட்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தின் ஆணைகளை உடனுக்குடன் செயல்படுத்த நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...