தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை, பதிவுத்துறைகளில் இதுபோன்ற லஞ்ச சம்பவங்கள் அதிகமாகவே நடந்து வருகின்றது.
ராமநாதபுரத்தில் கணக்கில் வராத ரூ.5.60 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து ராமநாதபுரம் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலக அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல, தூத்துக்குடியில் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தமிழகத்தில் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.
சாதி சான்றிதழ், பட்டா வழங்குவது, நிலம் அளவீடு, உதவித்தொகை என எண்ணற்ற உதவிகளை கோரி, விண்ணப்பதாரர்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்றால், அவர்களிடம் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேரடியாகவே லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு புகார்களை தந்துவிடுகிறார்கள். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்டவர்கள் கையும் களவுமாக சிக்கினால், அவர்களை அப்போதே அதிகாரிகள் கைது செய்கிறார்கள். இதில் விஏஓ, தாசில்தார், என பெண் அதிகாரிகளும் அடக்கம் என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.
இதுபோல அரசு அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை பொதுமக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும், புகார்களையும் தெரிவித்து வருகின்றனர். இதனால், புகார்கள் வரும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அடிக்கடி திடீர் சோதனை நடத்துவது வழக்கமாகிவிட்டது.
அந்த வகையில், ராமநாதபுரம் நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளர் (தரக்கட்டுப்பாட்டு பிரிவு) அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீரென சோதனையை மேற்கொண்டனர். அப்போது, கணக்கில் வராத பணம் ரூ.5.60 லட்சம் சிக்கியது. இது தொடர்பாக அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல, தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
விக்கிரவாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சோதனை மேற்கொண்டனர். அதிக லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது.
இதில், கணக்கில் வராத ரூ.3,63,000 கைப்பற்றப்பட்டது. மாவட்ட பதிவாளர் (தணிக்கை) சதாசிவம், புதுக்கோட்டை சார் பதிவாளர் செல்வகுமார் ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும், இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. எனவே, பறிமுதல் செய்யப்பட்டு, பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.