Sunday, 2 February 2025

சென்னை பெருநகர மாநகராட்சியில லஞ்சம் திளைத்த அதிகாரிகளை களையெடுப்பு!

சென்னை பெருநகர மாநகராட்சியில், கட்டட வரைபட அனுமதியில் விதிமீறல், 'சீல்' வைக்கப்பட்ட கட்டடங்கள் திறப்பு, மாமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து ஊழல், லஞ்ச லாவண்யங்கள் திளைத்த  அதிகாரிகளைக் களையெடுக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. ஓரிரு மாதங்களில், மட்டும் 100க்கும் மேற்பட்டோர் மூன்றாம் நிலை நகரங்களுக்கு மாற்றப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சி, தனித்த சட்டத்தின்படி இயங்கி வந்தது. இதனால், தமிழ்நாடு நகராட்சி சீர்த்திருத்தம் மற்றும் நிர்வாகத் துறையின் உத்தரவுகள், சென்னை மாநகராட்சிக்கு பொருந்தாத நிலை நீடித்து வந்தது.

சென்னை பெருநகர மாநகராட்சியின் உயர்ப் பதவியில் இருக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தவிர்த்து, மற்ற பொறுப்புகளில் வகிப்போர், தவறு செய்தாலும், சென்னை மாநகராட்சிக்கு உள்ளேயே இடமாற்றம் செய்யப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், 2023ல் நகர்ப்புற உள்ளாட்சி விதி, திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, நகராட்சி நிர்வாகத்தின் கீழ், சென்னை மாநகராட்சியும் கொண்டு வரப்பட்டது.

மேலும், சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகள், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகளில் இடமாற்றம் செய்யப்படலாம் என்ற விதியும், அமலுக்கு வந்தது.

இந்த திருத்தத்திற்கு பின், சுகாதார அதிகாரிகள் சிலர், தமிழ்நாட்டிலுள்ள தங்களின் சொந்த  மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற்றனர். அதேநேரம், பெரும்பாலான சுகாதார அதிகாரிகள் இடமாறுதலுக்காக காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே, கட்டட வரைபட விதிமீறல், ஒப்பந்ததாரரிடம் லஞ்சக் கையூட்டு, 'சீல்' வைக்கப்பட்ட கட்டடங்களை பின்புறத்தில் திறந்து விடுதல் உள்ளிட்ட விதிமீறலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் குறித்த பட்டியலை, மாநகராட்சி சேகரித்துள்ளது.

அதில், லஞ்சக் கையூட்டுப் பெற்றது குற்றம் உறுதி செய்யப்பட்ட 11 உதவி பொறியாளர்கள் முதற்கட்டமாக, மூன்றாம் நிலை நகராட்சிகளில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையாக, கட்டாய பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடுவதாகும்.

இதேபோல், பல்வேறு நிலைகளிலுள்ள 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் முதல், பணியாளர்கள் வரையிலானோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க, புகாரின் உண்மை தன்மை விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதுமட்டுமின்றி சென்னை பெருநகர மாநகராட்சியில் பெரும்பாலான அதிகாரிகள், 20 ஆண்டுகளுக்கு மேல், சென்னையில் அருகருகே வார்டுகளிலேயே பணியாற்றி வருகின்றனர்.

இதனால், உள்ளூர் அரசியல்வாதிகளுடன் நல்ல தொடர்பிலிருந்துக் கொண்டு, பல்வேறு முறைகேடிலும், லஞ்சலாவண்யம் கையூட்டுப்  பெற்று வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

குறிப்பாக, விதிமீற கட்டப்படும் கட்டடங்களுக்கு பணம் பெறுதல், 'சீல்' வைக்கப்பட்ட கட்டடத்தை பயன்படுத்த, பின்பக்க கதவை திறந்து கொள்ள லஞ்சக் கையூட்டுப் பெறுதல், ஒப்பந்தாரர்களிடம் லஞ்சம் பெறுதல் உள்ளிட்ட முறைகேடில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்களாம்.

மேலும், சுகாதார அலுவலர்கள் சிலரும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் அளிக்கவும், மயான பூமிகளில் ஒப்பந்ததாரருடன் இணைந்தும் லஞ்சம் பெறுகின்ற குற்றச்சாட்டு விழுந்துள்ளது.

இவர்கள் குறித்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், உண்மை தன்மை ஆராயப்பட்டு வருகிறது.

இதில், குற்றம் உறுதி செய்யப்படுவோர் உடனடியாக, மூன்றாம் நிலை நகரங்களுக்கு, ஒழுங்கு நடவடிக்கையாக மாற்றப்படுவர். மற்ற மாநகராட்சிகளில் பணியாற்றுவோர், சென்னைக்கு பணியமர்த்தப்படுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிலும் ஐலட் என்னவென்றால் ஆளும் கட்சிக்கு பிடிக்காத அதிகாரிகள் பணியிட மாற்றம்..?

பணி இடமாற்றம் குறித்து, மாநகராட்சி பொறியாளர்கள் கூறியதாவது:

ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், அவரிடம் விளக்கம் பெற்றிருக்க வேண்டும். அதுபோன்று எதுவும் மேற்கொள்ளாமல், அடுத்தாண்டு ஓய்வு பெறுவோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில், ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், அரசியல்வாதிகளுக்கு ஒத்துழைப்பு தராத அதிகாரிகளை மாற்றி வருகின்றனர். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு, எவ்வளவு லஞ்சம் பெற்றாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அனைத்து மட்டத்திலும், சென்னையில் ஊழல், லஞ்ச லாவண்யம் நடந்து வருகிறது.

No comments:

Post a Comment

மதுரை மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகிரி கலெக்டராக பிரமோஷன்!.. 71வது புதிய ஆணையாளராக சித்ரா விஜயன், ஐஏஎஸ்., நியமனம்..!!

மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாநகராட்சியில் சொத்து வர...