சிவகங்கையில்: பாரா ஒலிம்பிக் தகுதி போட்டியில் பங்கேற்று 4-வது இடத்தை பிடித்து சாதித்த கண் தெரியாத மாற்றுத்திறனாளி சரண்யாவின் வீடு சேதம் அடைந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் தனது பூர்வீக வீட்டுக்கு பட்டா கேட்டு விண்ணப்பித்த சரண்யாவின் தாயார் ராஜேஸ்வரியிடம் கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அலுவலரை பணியிடை நீக்கம் செய்து சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத்., ஐஏஎஸ். உத்தரவிட்டுள்ளார்.
அரசு ஊழியர்கள் பட்டா பெயர் மாற்றம், பத்திரப்பதிவு, சொத்து வரி பெயர் மாற்றம், வாரிசு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், விதவையர் சான்றிதழ் உள்பட பல்வேறு அரசின் சேவைகளை பெற லஞ்சம் வாங்கினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
உங்களிடம் லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் குறித்து மாவட்ட தலைநகரிலுள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தால், அந்த குறிப்பிட்ட அரசு அதிகாரியை கையும் களவுமாக பிடிக்கப்படுவார்கள்.. அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதுடன், கைதும் செய்யப்படுவார்கள். விசாரணை முடிவில் தண்டனையும் அவர்களுக்கு கிடைக்கும். எனவே லஞ்சத்தை எதிர்பார்த்து உங்களை அலைகழித்தால் தைரியமாக புகார் அளியுங்கள். சிவகங்கை மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் பற்றி இப்போது பார்ப்போம்.
சிவகங்கை மாவட்டம், கீழநெட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மனைவி ராஜேசுவரி. இவர்களுக்கு 24 வயதில் சரண்யா என்ற மகள் சரண்யா இருக்கிறார். இவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாவார். கண் பார்வை இல்லாத நிலையில் கூட இவர் பாரா ஒலிம்பிக் தகுதி போட்டியில் பங்கேற்று 4-வது இடத்தை பிடித்து சாதித்தவர் சரண்யா. இவரது பூர்விக வீடனாது சேதம் அடைந்த நிலையில் இருந்துள்ளது.
இந்நிலையில் தங்களது பூர்வீக வீட்டுக்கு பட்டா கேட்டு சரண்யாவின் தாயார் ராஜேசுவரி, கிராம நிர்வாக அலுவலர் ராக்குவிடம் விண்ணப்பித்து உள்ளார். அதற்கு அவர் ரூ.4 ஆயிரம் லஞ்சமாக கேட்டாராம். இதையடுத்து ராஜேசுவரி கூகுள் பே மூலமாக ரூ.3 ஆயிரம் அனுப்பியுள்ளார். ஆயிரம் ரூபாயை ரொக்கமாக கொடுத்திருக்கிறாராம். இந்தநிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜீத் வீராங்கனை சரண்யாவின் வீட்டுக்குச் சென்று ஆய்வு செய்து பட்டா மற்றும் வீடு கட்டுவதற்கான ஒப்புதலை வழங்கியிருக்கிறார்.
இதை தொடர்ந்து ராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலரிடம் லஞ்சமாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டிருக்கிறார். ஆனால் பணம் கொடுக்காமல் அவரை அலைக்கழித்ததாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக ராஜேசுவரி, இளையான்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ராக்கு, பணத்தை திருப்பி கொடுத்ததாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் சிவகங்கை மாவட்ட ஆஷா அஜீத்., ஐஏஎஸ். அதிகாரியின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் ராக்குவை, மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜீத் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.